கோடை வெப்பம் தணிந்தது குமரியில் இடி, மின்னலுடன் பலத்த மழை- சாலைகளில் வெள்ளம் - போக்குவரத்து பாதிப்பு

நாகர்கோவில் : நாகர்கோவில் உள்பட  மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

குமரி மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. வெயிலின் உக்கிரம் அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த சில நாட்களாக குளிர்ந்த காற்றுடன் மழை நீடித்து வருகிறது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சிற்றார் 2 அணை பகுதியில் 17.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சிற்றார் 1 ல் 3 மில்லி மீட்டரும், கொட்டாரம் 1.4, மயிலாடி 6.8, நாகர்கோவில் 1.1, பெருஞ்சாணி 5.2, புத்தன் அணை 4.6, சுருளகோடு 7, மாம்பழத்துறையாறு 1.4, அடையாமடை 12, குருந்தன்கோடு 8.4 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது.

இந்த நிலையில் நேற்று மதியத்துக்கு பின், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை இருந்தது. மலையோர பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. குலசேகரம், அருமனை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று பகலில் வெயில் வாட்டி வதைத்தது. மாலை 4.30 மணியளவில் பலத்த இடி, மின்னலுடன்  மழை பெய்தது.

சுமார் 1 மணி நேரம் மழை நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இன்று முதல் 2 வாரங்களுக்கு ஊரடங்கு என்பதால், நேற்று (ஞாயிறு) அனைத்து கடைகளும் திறந்து இருந்தன. இதனால் பொருட்கள் வாங்க ஏராளமானவர்கள் கடை வீதிகளில் திரண்டனர். மழை பெய்து, சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து முடங்கியது. நாகர்கோவில் பார்வதிபுரம், வேப்பமூடு, செட்டிக்குளம், பாலமோர் ரோடு பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியால் வாகனங்கள் திணறின. தொடர்ந்து இரவு வரை  விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

1 அடிக்கும் கீழ் சென்ற முக்கடல் அணை

அணைகளின் நீர் மட்டத்தை பொறுத்தவரை பேச்சிப்பாறை 41.55 அடியாகவும், பெருஞ்சாணி 54.20 அடியாகவும் உள்ளன. பொய்கை 17, மாம்பழத்துறையாறு 14.60, சிற்றார்1, 7.08, சிற்றார்2, 7.18 அடியாக உள்ளன. முக்கடல் அணை நீர் மட்டம் 0.9 ஆக உள்ளது. முக்கடல் அணையின் நீர் மட்டம் 1 அடிக்கும் கீழ் சென்று விட்டது. அணையின் நீர் மட்டம் மைனஸ் அளவை நோக்கி செல்வதால், நாகர்கோவில் மாநகரில் குடிநீர் தேவையை சமாளிக்க பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அணைகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் கன்னிப்பூ சாகுபடிக்காக அணைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமை சமாளிக்க ஏற்கனவே போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Related Stories: