ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 13 பேர் பலி

*படுக்கை வசதி இல்லாததால் அவதி

*மரத்தடியில் சிகிச்சை பெறும் அவலம்

ஆத்தூர : ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 13 பேர் உயிரிழந்த நிலையில், படுக்கை வசதி இல்லாததால் மரத்தடியில் சிகிச்சை பெறும் அவலநிலை காணப்படுகிறது.ஆத்தூர் அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதுடைய 4 பேரும், 36 வயதுடைய ஒருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், தொற்று அறிகுறியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படடிருந்த 8 பேரும் திடீரென உயிரிழந்தனர்.

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் 76 படுக்கை வசதிகளுடன் செயல்படும் கொரோனா சிகிச்சை பிரிவில் 67 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், பிரதான வார்டில் தொற்று அறிகுறியுடன் 128 படுக்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா பிரிவு அருகில் மரத்தடியில் விநாயகபுரம் நாராயணன்(44), சின்னசேலம் தங்கராஜ்(47), அரவிந்த்(28), சந்திரசேகர்(40) மற்றும் கார்த்திக்(29) உள்பட 40 பேர் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனை சார்பில் எவ்வித பொருட்களும் வழங்கப்படாமல், வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்ட பெட்சீட்டை தரையில் விரித்து படுத்துள்ளனர்.

இதுகுறித்து நேற்று ஆய்வு மேற்கொண்ட மண்டல கொரோனா கண்காணிப்பு அலுவலரான முகமது நஜிமுதினிடம் புகார் அளித்தனர். அப்போது, வார்டு முழுவதும் நிரம்பி வழிவதால் படுக்கை ஒதுக்கீடு செய்ய முடியவில்லை என மருத்துவமனை மருத்துவ அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி உரிய சிகிச்சையளிக்குமாறு கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார்.

Related Stories: