கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிக்க 24 பறக்கும் படை-கலெக்டர் தகவல்

புதுச்சேரி : புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. இதற்காக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் கொரோனா தொற்று பரவல் குறையவில்லை. எனவே, கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதியை கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்து, அந்த பகுதியில் உள்ள வழித்தடங்கள் அடைக்கப்படும்.

கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களின் நடமாட்டம் தடைசெய்யப்படும். மேலும் அந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்லாமல் இருக்கவும், வெளியில் இருந்து கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ளே வராமல் இருப்பதை கண்காணிக்கவும், அதே பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் இரு நபர்கள் கண்டறியப்படுவார்கள். அந்த கட்டுப்பாட்டு பகுதிக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க அருகிலுள்ள கடைகளின் தொலைபேசி, அலைபேசி எண்கள் அனைத்து வீடுகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வணிக அமைப்பும் இணைந்து ஒத்துழைக்க முன்வந்துள்ளது. இதன் மூலமே அவர்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதுவரை புதுச்சேரி தாலுகாவில் 92ம், உழவர்கரை தாலுகாவில் 101ம், வில்லியனூர் தாலுகாவில் 51ம், பாகூர் தாலுகாவில் 29ம் என மொத்தம் 273 கட்டுப்பாட்டுப் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிக்க அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிக்க வருவாய் துறையின் மூலம் 24 பறக்கும் படைகள் அமைத்து பணியில் உள்ளனர். காவல்துறையும் தங்களின் ரோந்து பணியின்போது இக்கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிப்பார்கள்.

கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடிக்க தவறியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 8ம் தேதி 2,053 பேருக்கு அபராதம் விதித்து செலான் கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்கள் அனைத்தும் வரைபடங்கள் வரையப்பட்டு, அதன் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வரைபடங்கள் விபரம் வருவாய் துறை இணையதளத்தில் (https://collectorate.py.gov.in, https://puducherry-dt.gov.in) மற்றும் கோவிட் டேஷ்போர்டிலும் (https://covid19dashboard.py.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த பதிவேற்றத்தை கண்டு, கொரோனா தொற்று உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை வசதிகள் குறித்த தகவல்களை கோவிட் டேஷ்போர்டில் தெரிந்து கொள்ளலாம். சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்படுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேச குடியியல் பாதுகாப்பு படையில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை வரும் 31ம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும், கட்டுப்பாட்டு பகுதிகளையும், ஆரம்ப சுகாதார நிலையத்தையும் கலெக்டர் ஆய்வு செய்து வருகிறார்.

ஆய்வின்போது அனைத்து துறையின் ஒருங்கிணைப்பும், மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கின்றதா என்பது கண்டறியப்பட்டு, அவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவை உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தங்களின் குறைகளை நிவர்த்தி செய்ய பின்வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கலாம். மருத்துவ தொடர்பான குறைகளுக்கு 104 என்ற எண்ணிலும், இதர குறைகளுக்கு 1070, 1077 ஆகிய எண்களிலும் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: