மதகடிப்பட்டு அருகே ஆண்டியார்பாளையத்தில் மாட்டுக்கொட்டகை, கரும்பு தோட்டத்தில் பதுக்கிய 689 லிட்டர் சாராயம் பறிமுதல்-கலால்துறை அதிரடி

புதுச்சேரி : மதகடிப்பட்டு அடுத்த ஆண்டியார்பாளையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 630 லிட்டர் எரிசாராயம், 59 லிட்டர் சாராயத்தை கலால்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர்த்து, அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளை மூடவும் கலால்துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கலால் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நேற்று அதிகாலை தாசில்தார் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர்கள் நாகராஜன், பிரேம் பிரகாஷ் மற்றும் காவலர்கள் வசந்தகுமார், குமரன், சதீஷ் ஆகியோர் மதகடிப்பட்டு அருகில் உள்ள ஆண்டியார்பாளையம் கிராமத்தில் மாங்குளம் பாதையை சேர்ந்த முத்து என்பவரின் வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் சோதனை செய்தனர்.

அப்போது, அங்கு 35 லிட்டர் அளவு கொண்ட 15 கேன்களில் எரிசாராயம் மற்றும் 59 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மாட்டு கொட்டகை அருகில் இருந்த கரும்பு தோட்டத்தில் 35 லிட்டர் அளவு கொண்ட 3 கேனில் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது. மொத்தமாக 630 லிட்டர் எரிசாராயம் மற்றும் 59 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். மேலும், ஏழுமலை மீது கலால் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Related Stories: