கள்ளக்குறிச்சி உழவர்சந்தை அரசு பள்ளிக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி உழவர்சந்தையில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கள், பழங்கள், பூ, கீரைகள் உள்ளிட்டவை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். ஆனால் நெருக்கடியான இடத்தில் வியாபாரங்கள் செய்து வருவதால் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே சமூக இடைவெளியுடன் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக வியாபாரம் செய்வதற்கு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் உழவர்சந்தை செயல்பட நடவடிக்கை எடுத்ததைபோல் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் அதிகரிப்பை கருத்தில் கொண்டு இடமாற்றம் செய்ய வேண்டும் என கடந்த 29ம்தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

அதன் எதிரொலியாக உழவர்சந்தை கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதனையடுத்து கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் காந்த் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக வியாபாரிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு இருசக்கர வாகனம் உள்ளே செல்லாதவாறு தடுப்புகட்டைகள் அமைத்து கொடுக்க நகராட்சி ஆணையர் குமரனுக்கு அறிவுறுத்தினார். அதன்படி உழவர்சந்தை கள்ளக்குறிச்சி அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் சமூக இடைவெளியுடன் செயல்பட தொடங்கியது.

Related Stories: