மரக்காணம் டாஸ்மாக்கில் குவிந்த மது பிரியர்கள்-நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்

மரக்காணம் : கொரோனா தொற்று இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுபோல் மே 10ம் தேதி (இன்று) முதல் 24ம் தேதி வரையில் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள்  மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் தங்களுக்கு தேவையான மதுபானங்கள் கிடைக்காது என்று கருதிய மது பிரியர்கள் முன்கூட்டியே மது பாட்டில்களை வாங்கி குவிக்க துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் புதுவை மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. எனவே புதுவை மாநிலத்தில் இருந்து அதிகளவில் மது பிரியர்கள் தமிழக பகுதியான மரக்காணத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்க  குவிந்தனர். இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக எப்போதும் இல்லாத வகையில் மரக்காணம் டாஸ்மாக் கடையில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

இதுபோல் கூட்டம் அலைமோதியதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டாஸ்மாக் ஊழியர்கள் ஒரு பாட்டிலுக்கு சராசரியாக ரூ.20 முதல் ரூ.30 வரையில் அதிகம் வைத்து விற்பனை செய்துள்ளனர். ஆனால் விலை எவ்வளவு உயர்த்தினாலும் பரவாயில்லை தங்களுக்கு மது பாட்டில்கள் கிடைத்தால் போதும் என்று பல மணி நேரம் கொளுத்தும் கோடை வெயிலில் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் கொரோனா பற்றியும் கவலைப்படாமல் மது பாட்டில்களை பைகள், சாக்குகள், அட்டை பெட்டிகள் போன்றவற்றில் மொத்தமாக வாங்கி சென்றனர்.

Related Stories: