முழு ஊரடங்கு எதிரொலி கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்-ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் பயணம்

கோவை : தமிழகத்தில் இன்று முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கோவையில் இருந்து  வெளியூர்களுக்கு நேற்று கூடுதலாக  50 பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (10ம் தேதி) முதல் வரும்  24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால்,  இன்று முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக  கோவையில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர். இதனால், கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

பலர்  முண்டியடித்துக்கொண்டு பஸ்சில் ஏறினர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் பயணிகள் பஸ்சில் ஏற்றப்பட்டனர். மேலும், பயணிகள் கூட்டத்தை தொடர்ந்து கோவையில் இருந்து மதுரை, திருச்சி, நாமக்கல், நெல்லை உள்ளிட்ட வெளியூர்களுக்கு கூடுதலாக 50 பஸ்கள்  இயக்கப்பட்டன.

 இதில், நேற்று முன்தினம் மட்டும் 10 ஆயிரம் பேர் வரை பயணம் செய்துள்ளனர்.

மேலும், காந்திபுரம் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, நாகர்கோவில், தென்காசி, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கூடுதல்  பஸ்கள் இயக்கப்பட்டன. இதில், ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

இது குறித்து கோவை மண்டல போக்குவரத்து உதவி பொதுமேலாளர் செந்தில் குமார் கூறுகையில்,`கோவையில் இருந்து திருச்சி, மதுரை, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வழக்கமாக 90 பஸ்கள் இயக்கப்படும். கடந்த 2 நாட்களாக கூட்டம் அதிகமாக இருந்ததால் கூடுதலாக 50 பஸ்கள் சேர்த்து 140 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில், ஏராளமானோர் பயணம் செய்தனர்’ என்றார்.

Related Stories: