கார், ஆட்டோக்களில் மதுபாட்டில் கடத்தல்-திண்டுக்கல்லில் 3 பேர் கைது

திண்டுக்கல் :  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சிலர் மதுபானக் கடைகளில் பெட்டி, பெட்டியாக வாங்கிச் செல்வதாக கிடைத்த தகவலையடுத்து திண்டுக்கல் எஸ்பி தனிப்பிரிவு எஸ்ஐ மாரிமுத்து தலைமையில், போலீசார் ஜிடிஎன் காலேஜ் அருகில் ஓடைப்பட்டி பிரிவில் வாகன தணிக்கை செய்தனர்.

அவ்வழியாக வந்த ஆட்டோவை மறித்து சோதனையிட்டனர். பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் வெங்கடேஷ்(35) ஆட்டோவில் 184 மதுபாட்டில்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். அதேபோல் காப்பிலியபட்டி காலனியைச் சேர்ந்த வையாபுரி மகன் சின்னமணி(35) என்பவர் 121 மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

அவரிடம் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. பழைய கரூர் ரோட்டில் வாகன தணிக்கையின் போது  காரில் வந்த நபரை சோதனையிட்ட போது 262 மதுபாட்டில்களை  எஸ்பி தனிப் பிரிவு படையினர் கைப்பற்றினர். இந்த மூன்று பேரிடமிருந்து சுமார் 567 மதுபட்டில்களை எஸ்பி தனிப்படைப்பிரிவினர் கைப்பற்றினர். அவர்கள் கடத்தி வந்த ஆட்டோ மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

>