அதிக கட்டணம் வசூல், வரி செலுத்தாததால் 11 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு 14.13 லட்சம் அபராதம் விதிப்பு: போக்குவரத்துத்துறை நடவடிக்கை

சென்னை: அதிக கட்டணம் வசூல், வரி செலுத்தாத காரணத்தால் 11 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு 14.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக அனைத்து வகையான  போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து பொதுமக்கள் அரசு பஸ், ரயில், ஆம்னி பஸ்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில ஆம்னி பஸ்களில் கட்டணம்  உயர்த்தப்பட்டிருப்பதாக போக்குவரத்துத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ‘மக்கள் அதிகமாக சொந்த ஊர்களுக்கு செல்லும் இந்த சூழலைப் பயன்படுத்தி, தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் பொதுமக்களிடம் அதிக கட்டணம்  வசூலிக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை எச்சரித்திருந்தது.

மேலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆங்காங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டது.  இதில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தமைக்காகவும், வரி செலுத்தாமல் இயங்கிய ஆம்னி பஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை முறையே சென்னையில் 2  ஆம்னி பஸ், தஞ்சாவூர்-1, கோவை-6, விருதுநகர்-2 என மொத்தம் 11 ஆம்னி பஸ்கள் விதிமுறைகளை மீறியது தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட பஸ்களின் உரிமையாளர்களுக்கு 14,13,600 அபராதம் விதிக்கப்பட்டதாக  போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாகாலாந்து பேருந்து பறிமுதல்

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயா, ஆனந்தன், கார்த்திக் ஆகியோர் பெருங்களத்தூர் பேருந்து  நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் 27 ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டது. அதில் அதிக கட்டணம் வசூலித்த மற்றும் சாலை வரி செலுத்தாத 6 பேருந்துகளுக்கு நோட்டீஸ் தரப்பட்டது.மேலும், 1.44 லட்சம்  சாலை  வரியும், ₹30 ஆயிரம்  அபராதமும் பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டது. பின்னர், 5 பேருந்துகள் விடுவிக்கப்பட்டது. நாகாலாந்தை சேர்ந்த ஆம்னி பேருந்து ஒன்று மட்டும் வரி செலுத்த தவறியதால் பறிமுதல் செய்யப்பட்டது.  அந்த பேருந்தில் இருந்த பயணிகளுக்கு அதிகாரிகள் மாற்று பேருந்து ஏற்பாடு செய்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: