×

தேவைக்கு அதிகமாக மதுபாட்டில்கள் வாங்கிய 17 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: ஒரு நபருக்கு தேவையான அளவை விட கூடுதலாக மதுபானங்கள் வாங்கியதாக 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் இன்று முதல் முழு  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 தினங்களாக மதுபிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி குவித்து வருகின்றனர். குறிப்பிட்ட டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி எடுத்து செல்லும்போது  அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து வழக்கு பதிந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று முன்தினம் புளியந்தோப்பு சரகத்துக்கு உட்பட்ட ஓட்டேரி, ஸ்டேரன்ஸ் ரோடு பகுதியில் முரளி(39),  இளையராஜா(38) ஆகியோரிடம் இருந்து 16 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  இதேபோல் அஸ்லாம்(38), முகமது அலி(28) ஆகியோரிடமிருந்து 20 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  

மேலும், ஓட்டேரி பகுதியில் ரவி(58), அமுதா(35) ஆகியோரிடம் 20 மதுபாட்டில்கள், புளியந்தோப்பு காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சரவண ஜோதி(35), சுமதி(40), நிவேதா(25) ஆகியோரிடமிருந்து 15 பாட்டில்கள், எம்கேபி நகர்  காவல்நிலையத்துக்கு உட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திக்(29) என்பவரிடம் 50 மதுபாட்டில்கள், கொடுங்கையூர் காவல்நிலையத்துக்கு உட்பட்ட மீனாம்பாள் சாலை பகுதியில் பூபாலன்(23) என்பவரிடம் இருந்து 48 மது  பாட்டில்கள், பெரவள்ளூர் காவல்நிலையத்துக்கு உட்பட்ட அஞ்சுகம் நகரில் பெரியசாமி(58) என்பவரிடம் இருந்து 18 பாட்டில்கள், திருவிக நகரில் சரவணன்(30) என்பவரிடம் இருந்து 14 மது பாட்டில்கள், ஜி.கே.எம். காலனியில் சேகர்(36) என்பவரிடம்  இருந்து 15 மதுபாட்டில்கள், பெரியார் நகர் மார்க்கெட் பகுதியில் ரவி(50), சுரேஷ்(30) ஆகியோரிடம் இருந்து 57 மதுபாட்டில்கள், பெரவள்ளூரில் பிரேம்குமார்(25) என்பவரிடம் இருந்து 20 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து  இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர் பிணையில் விடுவித்தனர்.

Tags : Case against 17 people who bought more liquor than needed
× RELATED பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 17 பேர் பிடிப்பட்டனர்