×

மதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய கர்ப்பிணி பெண் டாக்டர் கொரோனாவால் மரணம்

போடி: மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய கர்ப்பிணி பெண் டாக்டர், கொரோனாவிற்கு பலியானார். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே, ஓடைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ  அலுவலராக பணிபுரிந்தவர் டாக்டர் பழனிச்சாமி. இவரது மகள் சண்முகப்பிரியா (32). மதுரை மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்தார். அதன்பின்னர்  சின்னமனூர் அரசு மருத்துவமனையில் 2013 முதல் 2020 வரை டாக்டராக பணிபுரிந்தார்.  ஆறு மாதங்களுக்கு முன்பு, மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். 8 மாத கர்ப்பிணியான இவர், விடுமுறை எடுத்து வீட்டில் இருக்காமல், கொரோனா மருத்துவ சேவைப்பணியில் தொடர்ந்து  ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், சண்முகப்பிரியாவுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன், லேசாக காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டது. பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருந்தது உறுதியானது.

 இதையடுத்து இவர் சிகிச்சைக்காக மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவன தலைவர்  ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நர்ஸ் உயிரிழப்பு: வேலூர் வள்ளலார் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பிரேமா(52). இவர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்,  புறநோயாளிகள் பிரிவில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வார்டில் நர்சாக பணியாற்றிய பிரேமாவுக்கு, எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து,  அங்கேயே கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த பிரேமா நேற்று காலை உயிரிழந்தார். பிரேமா நர்சாக 25 ஆண்டுகள் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்கு  பெண் எஸ்ஐ பலி
ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி அருகே வாழவந்தாள்புரத்தைச் சேரந்தவர் லெட்சுமி (45). கடந்த 97ம் ஆண்டு, சிறப்பு காவல்படை போலீசாக தேர்வு செய்யப்பட்டவர். எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்று, மதுரையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு  காவல்படை (பட்டாலியன்) 6ம் அணியில் பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் சரவணக்குமார், மதுரை வணிகவரித்துறையில் உதவி ஆணையராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மதுரை ஆத்திக்குளம் பகுதியில் வசித்து வந்த  லெட்சுமிக்கு கடந்த 5ம் தேதி காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியாகவே மதுரை கொரோனா அரசு சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு  உயிரிழந்தார். நேற்று  காலை தத்தனேரி மயானத்தில் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்ஐ லெட்சுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.



Tags : Corona ,Madurai ,Government Hospital , Death of Dr. Corona, a pregnant woman working at Madurai Government Hospital
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...