கொரோனா 2வது அலை பாதிப்பால் தமிழகத்தில் 20% சரக்கு வாகனங்கள் மட்டுமே இயக்கம்: அரசு உதவி செய்ய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கோரிக்கை

சென்னை,: கொரோனா 2வது அலையின் காரணமாக தமிழகத்தில் 20 சதவீத சரக்கு வாகனங்கள் மட்டுமே இயங்குகிறது என அனைத்து இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அனைத்து இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸின் தமிழக தலைவர் முருகன் வெங்கடாசலம், தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: போக்குவரத்து துறையின் பல்வேறு தொடர் உத்தரவுகளினால் மோட்டார் வாகன உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாகன உரிமையாளர்கள் கையில் போதிய வருமானம் இல்லாமலும், பொருளாதாரம் இல்லாமலும் உள்ளனர். பொது முடக்கம்  அறிவித்திருப்பதினால் தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் சரக்குகள் விற்பனையின்மையால் கட்டுமான பொருட்கள் உற்பத்தி முடங்கி இருக்கின்றன. சரக்குகள் விற்பனை இருந்தால் மட்டுமே உற்பத்தி பெருகும். உற்பத்தி ஏற்பட்டால் மட்டுமே  வாகனங்களுக்கு லோடுகள் கிடைக்கும்.

தமிழகத்தில் உள்ள சரக்கு வாகனங்களில் 20 சதவீத வாகனங்கள் மட்டுமே அத்தியாவசிய பொருட்களான குடிநீர், பால், காய்கறிகள் போன்றவற்றை கொண்டு இயங்கி வருகின்றன. மீதமுள்ள சரக்கு வாகனங்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளது. இதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் பொருளாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தமிழகத்தில் மோட்டார் தொழிலில்  40 லட்சம் ஓட்டுனர்கள் மற்றும் சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் ஓட்டுனர்களில்  சுமார் 25,000 நபர்களும், தொழிலாளர்களில் மிக சொற்ப அளவிலும் மட்டுமே அமைப்புசாரா தொழிலாளர் நல ஆணையத்தில் உறுப்பிர்களாக இருந்து வருகிறார்கள். எனவே மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் உதவித்தொகையாக அமைப்புசாரா தொழிலாளர் நிதியிலிருந்து ரூ.5000 வீதம் வழங்க வேண்டும்.

சரக்கு வாகனங்கள் இயங்குவதற்கும், சுமை ஏற்றி, இறக்கும் தொழிலாளர்கள் செயல்படவும், பொதுபொருள் போக்குவரத்து சேவை பாதிக்காமல் இருக்க தடையில்லை என்ற அறிவிப்பை வெளியிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம். சரக்கு வாகனங்கள் இயக்கும் ஓட்டுனர்களுக்கு உரிய பாதுகாப்பையும், அத்தியாவசிய சரக்குகளை பறிப்பதை தவிர்க்க காவல்துறையினருக்கு உரிய உத்தரவும் பிறப்பித்து அறிவித்துமாறும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>