முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்புக் கோரி தொழில் வணிக அமைப்பினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை,: முழு ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கக்கோரி தொழில் வணிக அமைப்பினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கொரோனா பெருந்தொற்று முழு ஊரடங்கு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தொழில் மற்றும் வணிகச் சங்கத்தினர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்  துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும்  மக்கள் நல்வாழ்வுத்  துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களின் உயிர்களைப் பேணிக் காத்திடவும்,  பெருந்தொற்றின் தொடர் பரவல் சங்கிலியை முறித்திடவும், அரசு எடுத்துவரும்  போர்க்கால நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பேசியதாவது: இந்தக் கூட்டத்தை ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே நடத்தியிருக்க வேண்டும். பதவியேற்ற குறுகியகாலத்தில், அறிவிக்க வேண்டிய சூழல் உருவாகியதால் உங்களை அழைத்துப் பேசி அறிவிக்க முடியவில்லை என்றாலும், வரும் கா லங்களில் நிச்சயம் உங்களை கலந்தாலோசித்த பிறகு அறிவிக்கப்படும். மே மாதம் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தொழில் மற்றும் வர்த்தக சங்கங்கள் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும்.இதையடுத்து தொழில் மற்றும் வர்த்தகச் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்து தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளைப் பாராட்டி,  முழு ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்தன.  தொடர்ந்து, தொற்றுப் பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாப்பதே, அரசின் தலையாய குறிக்கோள். இந்தப் பெருந்தொற்றின் தொடர் பரவல் சங்கிலியை முறித்து, இந்தத் தொற்றின் பாதிப்பினை வெகுவாக குறைத்திட வேண்டும்.

மேலும், விலக்களிக்கப்பட்ட தொழிற் சாலைகளும், வர்த்தக அமைப்புகளும், அனைத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொழில் மற்றும் வணிக அமைப்புகள் சார்பாக தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகள் அறிவிக்கப்படும்  என முதலமைச்சர் தெரிவித்தார். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் நாளை முதல் 14 நாட்களுக்கு கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கிற்கு தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார். கொரோனா தொற்று சங்கிலியை அறுபட செய்வதில் தான் நமது வெற்றி அடங்கியுள்ளது.

ஊரடங்கின் மூலம் தொற்றின் வேகத்தை குறைக்கும் நிலையை உருவாக்க பொதுமக்கள், வணிக அமைப்புகள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதேபோல், முதல்வரின் நடவடிக்கைக்கு பாராட்டுக்களை வணிக பெருமக்கள் தெரிவித்துள்ளார்கள். அனைவரும் நல்ல கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. ஆக்சிஜன் உற்பத்தியை பெறுவதற்கான நடவடிக்கையை முதல்வர் முடுக்கிவிட்டுள்ளார். ஸ்டெர்லைட்டில் இருந்து நமக்கு வர வேண்டிய 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வரும் 11ம் தேதி கொடுத்துவிடுவதாக கூறியிருக்கிறார்கள். இதை 70 மெட்ரிக் டன்னாக உயர்த்துவதற்கு திட்டங்கள் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு 15ம் தேதி பதில் அளிப்பதாக கூறியிருக்கிறார்கள்.புதிய தொழில்நுட்பங்கள் மூலம் தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். தமிழ்நாட்டிற்கு தேவையான ஆக்சிஜனை நாமே உற்பத்தி செய்கிறோம். இவ்வாறு கூறினார்.

Related Stories:

>