பிரேத பரிசோதனைக்காக மகளின் சடலத்தை கட்டிலில் வைத்து 35 கிமீ நடந்த தந்தை: மத்திய பிரதேசத்தில் பரிதாபம்

போபால்,: பிரேத பரிசோதனைக்காக மகளின் சடலத்தை கட்டிலில் வைத்து 35 கிமீ தூக்கிக் கொண்டு தந்தை நடந்த சென்ற பரிதாப சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.மத்திய பிரதேச மாநிலம் சிங்க்ராளி மாவட்டத்தை ஒட்டி கடாய் கிராமத்தை சேர்ந்தவர் திரப்தி சிங் கோண்ட். இவரது 16 வயது மகள் கடந்த 5ம் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். விசாரிக்க வந்த போலீசார், பிரேத பரிசோதனை நடத்த சடலத்தை சிங்க்ராளி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரக் கூறினர். ஏழ்மையான நிலையில் உள்ள திரப்தியால், மகளின் சடலத்தை கொண்டு செல்ல வாகனத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கட்டிலில் வைத்து தூக்கி செல்ல முடிவு செய்தார். அதன்படி கயிற்று கட்டிலில் மகள் சடலத்தை வைத்து 35 கிமீ தூரம் தூக்கிச் சென்றார். சுமார் 7 மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவமனையில் சடலத்தை ஒப்படைத்தனர்.

இந்த பரிதாப காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.தந்தை கோண்ட் கூறுகையில், ‘‘காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு மருத்துவமனையை அடைந்தோம். எங்கள் கிராமத்திலிருந்து ஒரு கிமீ தூரத்தில் சாலை ஆரம்பிக்கிறது. அங்கிருந்தாவது வாகன வசதியை உள்ளாட்சி நிர்வாகம் செய்திருக்கலாம்’’ என்றார். போலீசார் தரப்பில் கூறுகையில், ‘‘சடலத்தை பிரேத பரிசோதனைக்கு கொண்டு வருவதற்கெல்லாம் டிபார்ட்மென்ட்டில் பணம் தர மாட்டார்கள்’’ என்றனர்.

Related Stories:

>