உடல்தகுதியுடன் இருந்தால் டெஸ்ட் போட்டிகளில் பூம்ரா 400 விக்கெட் வீழ்த்துவார்...அம்ப்ரோஸ் கணிப்பு

புதுடெல்லி,: இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா தனது உடல்தகுதியை நன்கு பராமரித்து வந்தால், டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட் வீழ்த்த முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வேகம் கர்ட்லி அம்ப்ரோஸ் கூறியுள்ளார்.சமூக வலைத்தள நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்ப்ரோஸ் இது குறித்து கூறியதாவது: தற்போதைய இந்திய அணியில் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஜஸ்பிரித் பூம்ராவின் மிகப் பெரிய விசிறி நான். மற்ற எந்த ஒரு வேகப் பந்துவீச்சாளரையும் விட பூம்ரா மிகவும் வித்தியாசமானவர். அவரது பந்துவீச்சு பாணி என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அவரால் 400 விக்கெட் வீழ்த்த முடியுமா என்று கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை… அதற்கு முழு தகுதி உடையவர் அவர். தனது உடல்தகுதியை நன்கு பாராமரித்து வந்தால், நிச்சயமாக அவரால் சாதிக்க முடியும். பந்தை நன்கு ஸ்விங் செய்வதுடன், துல்லியமான யார்க்கர்களையும் வீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க வல்லவர். அவரது பந்துவீச்சில் இல்லாத ஆயுதம் என்று எதையுமே சொல்ல முடியாது.

எனவே, பெரிய காயம் எதுவுமின்றி நீண்ட காலம் விளையாட முடிந்தால் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட் மைல்கல்லை எட்ட முடியும். அவர் தனது பந்துவீச்சுக்கு குறைவான தூரமே எடுத்துக் கொள்கிறார். இதனால் உடல் மீதான சுமை சற்று கூடுதலாக இருக்கும். அவர் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு அம்ப்ரோஸ் கூறியுள்ளார்.  இந்தியா  நியூசிலாந்து அணிகள் மோதும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், அடுத்த மாதம் 18ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற உள்ளது. அந்த போட்டியில் பூம்ராவின் பந்துவீச்சு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>