ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: குண்டுவெடிப்பில் 58 மாணவிகள் பலி

காபூல்: ஆப்கன் தலைநகரான காபூலில் பள்ளியருகே நேற்று முன் தினம் குண்டு வெடித்தது. இதில் 58க்கும் மேற்பட்ட மாணவிகள் பலியாகியுள்ளனர். 150க்கு மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கன் தலைநகரான காபூலில், சையது உல் சுகாதா என்ற பள்ளி உள்ளது. கடந்த சனிக்கிழமையன்று மாணவிகள் பள்ளியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது பள்ளியின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதுபோல் தொடர்ச்சியாக மூன்று முறை குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கர சம்பவத்தில் 58க்கும் மேற்பட்ட மாணவிகள் உடல் சிதறி பலியாகினர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ‘உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 11 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவிகள். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்’ என்று ஆப்கன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி, ‘தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகளே காரணமாக இருக்கலாம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், ‘இந்த குண்டுவெடிப்பு தங்களால் நிகழ்த்தப்பட்டதல்ல’ என்று மறுத்துள்ள தலிபான் தீவிரவாதிகள் அமைப்பு, சம்பவத்துக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. எனவே, இது ஐஎஸ் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பாக இருக்கலாம் என்று யூகங்கள் எழுந்துள்ளது. ‘ஆப்கனிலிருந்து அமெரிக்காவின் ராணுவம் முழுமையாக விலக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது’ என அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

Related Stories: