கொரோனா நோயாளிகளுக்கு பார்வை இழப்பை ஏற்படுத்தும் ‘பங்கஸ்’ பாதிப்புக்கு தனி வார்டு

அகமதாபாத்: கண் பார்வை இழப்பை ஏற்படுத்தும், ‘‘மியூகோர் மைகோசிஸ்’’ பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க  குஜராத்தில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் ‘‘கருப்பு ஃபங்கஸ் அல்லது மியூகோர் மைகோசிஸ்’’ என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அம்மாநில அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகளை ஏற்பாடு செய்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 100 பேர் மியூகோர் மைகோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிதான, மிகவும் மோசமான இந்நோயால் கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது. மேலும், பல நோய் தொற்றையும் உருவாக்குகிறது.

இந்நிலையில், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க தலா 60 படுக்கை வசதி கொண்ட இரண்டு வார்டுகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதில், 19 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல, வதோதரா, சூரத், ராஜ்கோட், பாவ் நகர், ஜாம் நகர் அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் குணமடைந்த 8 பேர், மியூகோர் மைகோசிஸ் நோயால் கண் பார்வை இழந்துள்ளனர்.

Related Stories:

>