5வது நாளாக தினசரி தொற்று 4 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பில் சற்று குறைவு: ஒரே நாளில் 4,092 பேர் பலி

புதுடெல்லி: கொரோனா தினசரி பாதிப்பு 5வது நாளாக நேற்றும் 4 லட்சத்தை கடந்து பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் 4,092 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும், கடந்த 2 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது.

கொரோனா 2வது அலை மே மாதத்தில் உச்சத்தை தொட்டு, இம்மாத இறுதியில் வெகுவாக குறைந்து விடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதற்கேற்றார் போல் கடந்த 1ம் தேதி தினசரி பாதிப்பு முதல் முறையாக 4 லட்சத்தை கடந்தது. அதன் பின், கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்கு குறையாமல் இருந்து வருகிறது. கடந்த 7ம் தேதி மிக அதிகபட்சமாக 4.14 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், நேற்றும் தினசரி தொற்று 4 லட்சத்தை தாண்டியே இருந்தது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 4 லட்சத்து 3 ஆயிரத்து 738 பேர் பாதிக்கப்பட்டனர்.

இது கடந்த 2 நாட்களைக் காட்டிலும் சற்று குறைவாகும். நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதன் பலனாக இனி வரும் நாட்களில் பாதிப்பு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த பாதிப்பு 2 கோடியே 22 லட்சத்து 96 ஆயிரத்து 414 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4,092 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 42 ஆயிரத்து 362 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 444 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 83 லட்சத்து 17 ஆயிரத்து 404 ஆகும். தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 37 லட்சத்து 36 ஆயிரத்து 648 ஆக உள்ளது. இதுவரை 16 கோடியே 94 லட்சத்து 39 ஆயிரத்து 663 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

படிப்படியாக குறைகிறது

வார எண்ணிக்கைப்படி பார்க்கும் போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைவது தெரிகிறது. கடந்த 7 நாட்களின் சராசரி பாதிப்பு 3 லட்சத்து 91 ஆயிரத்து 263 ஆகும். இது கடந்த வாரத்தை விட 20,117 அதிகமாகும். இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும் போது அதிகரிப்பு விகிதம் குறைந்துள்ளது. கடந்த மாதம் 24 முதல் மே 1ம் தேதி வரையிலான 7 நாட்களை பார்க்கும் போது அதற்கு முந்தைய வாரத்தை விட பாதிப்பு 61,173 அதிகரித்திருந்தது. ஏப்ரல் 17-24ம் தேதி வாரத்தில் முந்தைய வாரத்தை விட 1 லட்சத்து 6,024 எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இது, கொரோனா பாதிப்பு வளைவு குறையத் தொடங்கியிருப்பதை காட்டுகிறது.

6 அடி தூரத்துக்கும் அதிகமாக தாக்கும்

கொரோனா வைரசிடமிருந்து பாதுகாக்க 6 அடி இடைவெளி அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. ஆனால், காற்றில் பரவும் கொரோனா வைரஸ் 6 அடிக்கும் அதிகமாக செல்லக் கூடியது என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து 6 அடி தூரத்தை தாண்டி கொரோனா வைரஸ் காற்றில் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது என்றும், இது 15 நிமிடம் முதல் சில மணி நேரம் வரை காற்றில் உயிர்ப்புடன் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அவ்விடத்தை தாண்டி செல்பவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

நான்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசித்து வருகிறார். நேற்று முன்தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 4 மாநில முதல்வர்களுடன் பேசிய பிரதமர் மோடி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து நேற்று பஞ்சாப், கர்நாடகா, பீகார், உத்தரகாண்ட் மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசித்தார். கொரோனா 2வது அலையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் விளக்கின்றனர். ஆக்சிஜன் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி அவர்களிடம் உறுதி அளித்தார்.

டெல்லி, உபியில் ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா 2வது அலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், அரியானா, பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், இமாச்சலபிரதேசம், மிசோரம் ஆகிய 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.  டெல்லியில் இன்று அதிகாலை 5 மணியுடன் ஊரடங்கு முடிய இருந்த நிலையில், வரும் 17ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். ஊரடங்கு காலத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, உத்தரப்பிரதேசத்திலும் மே 17 வரை ஊரடங்கு ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>