அம்பத்தூர் மண்டலத்தில் கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம்: ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ பங்கேற்பு

ஆவடி: அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கண்காணிப்பு அலுவலர் சுரேஷ்குமார் ஐஏஎஸ் தலைமை வகித்து அதிகாரிகளிடம் தடுப்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அம்பத்தூர் தொகுதி எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் பேசினார். அப்போது அவர் வைத்த கோரிக்கை விவரம்; அத்திப்பட்டு கொரோனா வார்டு சிகிச்சை மையத்தில் ஆம்புலன்ஸ் வசதியை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசியின் பற்றாக்குறையை தடுக்கவேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீடுகளிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கவும் பிளிச்சிங் பவுடர் தூவவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா இரண்டாவது அலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு ஜோசப் சாமுவேல் பேசினார். இதையடுத்து ஐஏஎஸ் அதிகாரி சுரேஷ்குமார், முகப்பேர் கலைவாணர் காலனியில் தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களை பார்வையிட்டார். இந்த கூட்டத்தில் மண்டல அதிகாரி விஜயகுமாரி, செயற்பொறியாளர் சதீஷ்குமார், மண்டல சுகாதார அலுவலர்கள் டாக்டர் துளசி, டாக்டர் ஷீலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: