உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது சிறப்பாகவும், விரைவாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, நான் மாவட்டந்தோறும் மக்களைச் சந்தித்து, அவர்களிடமிருந்து ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின்கீழ், அவர்களின் பொதுவான அடிப்படைப் பிரச்னைகள் மற்றும் தனிப்பட்ட குறைகள்  குறித்து மனுக்களைப் பெற்றேன்.   திமுக ஆட்சி அமைந்தவுடன், அவற்றைப் பரிசீலித்து, பதவியேற்ற 100 நாட்களில் நிறைவேற்றித் தரப்படும் என்று அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அன்றே கையொப்பமிட்ட 5 கோப்புகளில் ஒன்றாக,  இப்பணிக்கென ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை அறிவித்து,

அதற்கென தனித் துறையை உருவாக்கி, அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலையில் ஒரு சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ்யை நியமித்தேன்.  அந்தச்  சிறப்புப் பணி அலுவலரிடம் நேற்று (8-5-2021) அந்த மனுக்கள் அனைத்தும் உரிய நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டன. அவற்றை உட்கட்டமைப்பு (புதிய சாலைகள், மேம்பாலங்கள் போன்றவை), சமூக சொத்துக்கள் (பள்ளிகள்,  மருத்துவமனைகள் போன்றவை) மற்றும் தனிப்பட்ட நபர்களின் கோரிக்கைகள் என மூன்றாகப் பிரித்துக் கொள்ளப்படும்.    இந்தப் பிரிவிற்கென ஒரு இணையதளம் துவக்கப்படும். தனி நபர் கோரிக்கைகளைப் பொறுத்தவரை, விரைவாக  நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அளிக்கப்பட்ட அனைத்து மனுக்களின் மீதும், கொரோனா காலம் என்பதால் இயன்றவரை மக்களின் தேவைக்கேற்ப சிறப்பாகவும், விரைவாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். அவற்றிற்குத் தீர்வும் காணப்படும் என்பதைத் தெரிவித்துக்  கொள்கிறேன்.

Related Stories: