சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக தாமரைக்கண்ணன் நியமனம்: உளவுத்துறை ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பொறுப்பேற்றார்

சென்னை: உளவுத்துறை ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக தாமரைக்கண்ணன் ஆகியோரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதையடுத்து, தேர்தல் வாக்குறுதியில் அளித்த 5 அறிவிப்புகளில் கையெழுத்திட்டார். அதன்பிறகு முதல்வரின் தனி செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம்,  அனுஜார்ஜ் ஆகிய நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதேபோல், தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பாட்டார். தொடர்ந்து, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக  ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு தமிழகத்தில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அதன்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த  மகேஷ்குமார் அகர்வால் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். கோவை மாநகர போலீஸ் கமிஷனராக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதேபோல்,  சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 அதிகாரிகளும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மகேஷ்குமார் அகர்வால், ஜெயந்த் முரளி ஆகியோருக்கு  விரைவில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும்.

Related Stories: