தமிழகத்தில் சென்னை தவிர்த்து மேலும் 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனை: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: தமிழக முதல்வர் உத்தரவுப்படி சென்னையை தவிர்த்து மேலும் 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை துவங்கியது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.  தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மா.சுப்பிரமணியன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு  செய்தார். பின்னர், சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:  ரெம்டெசிவிர் மருந்து கோவிட் தொற்றுக்கு பயன்படுமா? படாதா? என்பது விவாதத்திற்குள்ளாகியுள்ளது. அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இருந்தாலும் பொதுமக்கள் ரெம்டெசிவிர் மருந்து போட்டால் குறைந்து விடும் என்று  நம்பிக்கையினால் எல்லா மாவட்டங்களிலும் இருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு குவியத் தொடங்கியுள்ளனர். அங்கு மக்கள் வரிசையில் காத்திருப்பதை அறிந்த முதல்வர் மற்ற மாவட்டங்களிலும் விற்பனை செய்ய நடவடிக்கை  எடுக்க அறிவுறுத்தியிருந்தார். அதன்அடிப்படையில் மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் விற்பனை செய்யும் வகையில் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு நேற்று முதல் விற்பனையை தொடங்கியுள்ளனர்.

ரெம்டெசிவிர் மருந்துகள் குறித்து டிஎம்எஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதன்பிறகு தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ரெம்டெசிவிர் உயிர்காக்கும் மருந்து இல்லை, இது குறித்து அனைத்து தனியார்  மருத்துவமனைகளில் முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: