சட்டம்- ஒழுங்கை பேணி காப்பதே முதல் பணி: புதிதாக பதவியேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜூவால் அறிவிப்பு

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனராக சங்கர் ஜூவால் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.  சட்டம் ஒழுங்கை பேணி காப்பதே முதல் பணியாகும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ்  கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழக முதல்வராக நேற்று முன்தினம் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து, தேர்தல் வாக்குறுதியில் அளித்த 5 அறிவிப்புகளில் கையெழுத்திட்டார். அதன்பிறகு முதல்வரின் தனி செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத்,  எம்.எஸ்.சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதேபோல், தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பாட்டார்.

தொடர்ந்து, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்  சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த  மகேஷ்குமார் அகர்வால் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக சங்கர் ஜூவால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சென்னையின் 108வது காவல் ஆணையராக சங்கர் ஜூவால் ஐ.பி.எஸ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னதாக  ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி யாக பொறுப்பு வகித்துவந்த சங்கர் ஜூவாலை சென்னை காவல் ஆணையராக பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு நேற்று முன்தினம் நள்ளிரவு உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் சென்னை வேப்பேரியில் உள்ள  காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று சங்கர் ஜூவால் சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட சங்கர் ஜூவால் நிருபர்களிடம் கூறியதாவது: முன்களப் பணியாளர்களான காவல்துறைக்கு என்-95 முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டு அவர்களின்  பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ள போதும், சில காவல்துறையினர் நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது.

மேலும், கொரோனாவை எதிர்த்து முன்களப் பணியாளர்களாக போராடி வரும் காவல்துறையினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  மேலும், சென்னையில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  ரெம்டெசிவிர் கள்ளச் சந்தை விற்பனை, கஞ்சா விற்பனை போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கண்காணிக்க உளவுத்துறை மூலம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுபோன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு ‘ஹாட்ஸ்பாட்’ பகுதி எது என்பதை கண்டறிந்து அங்கிருந்து குற்றம் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில் சூழ்நிலைக்கேற்ப மக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் நலன் காக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஊரடங்கின்போது தேவையின்றி  வெளியில் சுற்றுபவர்களுக்கு சூழ்நிலையை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதையும் மீறி வெளியில் வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: