முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஐடி வேந்தர் வாழ்த்து

சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தமிழியக்க நிறுவன தலைவரும், விஐடி பல்கலைக்கழக வேந்தருமான கோ.விசுவநாதன் எழுதிய வாழ்த்து மடலின் விவரம் பின்வருமாறு: அரசியலில் ஐம்பதாண்டு  அயராத உழைப்பு, மிசா நெருக்கடிக் காலச் சிறைவாசம், திராவிட இயக்க கொள்கைகளில் பற்றுறுதி,தேர்வடமாக அறிவாலயத்திலிருந்து புறப்பட்ட திராவிட தேராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி கோட்டையை சென்றடைந்திருக்கிறார்.  2021 தமிழக சட்டபேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார்.

தந்தை பெரியார் கண்ட  சீர்திருத்த கனவுகளை நனவாக்கிய பேரறிஞர் அண்ணா, தமிழை செம்மொழி சிம்மாசனத்தில் அமர்த்திய சமத்துவபுர நாயகர் கலைஞர் உட்பட திராவிட இயக்க முன்னோடிகள் பாதங்களால் போட்ட பாதையில் முதல்வர்  பொறுப்பில் மு.க.ஸ்டாலின் பயணம் தொடர்ந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சமூக நீதி காக்கப்பட்டு தமிழினம் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டிட அமையும் திமுக ஆட்சி செம்மாந்த நடைபோட வாழ்த்துகிறோம். கொரோனா மக்களை  தாக்கி வீழ்த்தி விடாமல் காப்பரணாக இந்தியாவுக்கே உயிர்க்காற்று  வழங்கும் தமிழகம் என காலம் கணிக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: