பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்: ஏழை, நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் பயனடைவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்ததையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் பேருந்துகளில் பெண்கள் உற்சாகமாக பயணம் செய்தனர். மேலும்,  இந்த திட்டத்தால் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் பயனடைவார்கள் என பொதுமக்கள் தெரிவித்தனர். சென்னையில் இந்த திட்டத்துக்கு பெண்கள் அளித்த கருத்துகளின் விவரம் பின்வருமாறு:  கலையரசி, வியாசர்பாடி: கூலிவேலை செய்யும் நான் மாதா மாதம் ₹1000க்கு பாஸ் வாங்கி வேலைக்கு சென்று வருகிறேன். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பதவியேற்றதும், அரசு நகர பேருந்துகளில் பெண்கள்  இலவசமாக செய்யலாம் என்று அறிவித்தார். இது கூலிவேலை செய்யும் என்னை போன்ற பெண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

சிவகாமி, துரைப்பாக்கம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் பால் விலை குறைப்பு, நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்துள்ளார். இதனால், ஏழை எளிய நடுத்தர பெண்கள் பெரிதும் பயன் பெறுவார்கள். தேர்தல் வாக்குறுதியில்  சொன்னதை அறிவித்துள்ளார். இதேபோல் மக்களின் நலனில் கருத்தில் கொண்டு அவர் நல்லாட்சி புரிவார். பெண்களிடையே இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி தமிழகம் வளம்  பெறும் என்பதை நிருபித்து காட்டுவார்.

அன்னக்கிளி, புழல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் மகளிர் இலவசமாக நகரப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என உத்தரவிட்டார். அதன் எதிரொலியாக நேற்று முதல் மாநகர பேருந்துகளில் நாங்கள் இலவசமாக பயணம்  செய்து வருகிறோம். இதனால்,  பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். டிக்கெட் வாங்கி, பஸ்சில் சிரமப்பட்டு சென்று வந்த நாங்கள் இனி இலவசமாக செல்லலாம். எனவே, பஸ்சுக்கு செலவாகும் பணத்தை நாங்கள் எங்களது சேமிப்பாக  காய்கறியும், பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்துவோம்.

சஜினி பாண்டியன், கிழக்கு தாம்பரம்:ஆண்களுக்கு சரிசமமாக பெண்களும் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இவ்வாறு வேலைக்கு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பெண்கள் பேருந்துகளில் கட்டணங்கள் இல்லாமல் இலவசமாக செல்ல  முதல்வர் மு.க.ஸ்டாலின் சலுகை வழங்கியிருப்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இந்த திட்டத்திற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகள் தெரிவிப்பதோடு மேலும் இதுபோல பல திட்டங்களை பெண்களுக்காக அவர் செய்வார் என  மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.

யுவராணி ,உள்ளகரம்:   கட்டிட வேலை செய்யும் பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள் என கூலிவேலை செய்வோர் பல்வேறு இடங்களுக்கு பேருந்து மூலம் மாறி, மாறி செல்லும்போது சொற்ப வருமானத்தின் பெரும்பகுதியை பேருந்து  கட்டணத்திற்கே செலவிட வேண்டியிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு பெண் கூலிதொழிலாளர்கள் வயிற்றில் பால் வார்த்துள்ளது. மேலும் சாதாரண பேருந்துகளையும் அதிகப்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். பெண்கள்  மீது அக்கறை செலுத்தும் இந்த அரசு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.

ரவனம்மா, எர்ணாவூர்: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு மாநகர பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்ற உத்தரவு பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் ஏழை மற்றும் நடுத்தர  குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பெரிதும் பயனடைவார்கள். குறைவாக கூலி வாங்கும் வேலைக்குச் செல்லும் பெண்கள் மாநகர பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பு அவர்களுடைய அன்றாட செலவுகளில் பெரிதும்  உதவியாக இருக்கும்.

கஸ்தூரி, மேடவாக்கம்:  எங்களை போன்று தனியார் நிறுவனங்களில் குறைந்த வருமானம் பெரும் பெண்களுக்கு பேருந்து செலவு குறைவதால் மிச்சமாகும் பணத்தை வீட்டிலுள்ள தம்பி, தங்கைகள் கம்ப்யூட்டர், தொழில் கல்வி பயில்வதற்கு  உபயோகிப்போம். அல்லது குடும்ப செலவுகளுக்கு உபயோகிக்க உதவிகரமாக இருக்கும். இதனால் எங்களுடைய  குடும்ப பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள வாய்ப்பாக அமையும்.  

ஜானகியம்மாள், மேடவாக்கம்: எங்களை போல் பூ வியாபாரம் செய்பவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று பூ வாங்கி வந்து வியாபாரம் செய்தால் பேருந்து செலவு போக அன்றாடம் ₹100-300 லாபம் கிடைக்கும். தற்போது போக்குவரத்து செலவு குறைவதால் 500 வரை எங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பயண செலவுக்கான பணத்தில் கூடுதலாக பூ வாங்கி வந்து வியாபாரம் செய்தாலும் கூடுதல் லாபம்கிடைக்கும். அதனால் அன்றாட குடும்ப  செலவை சமாளிக்க மிகவும் உபயோகமாக இருக்கும். இதில் சிறிது சேமித்தால் எங்களது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளலாம்.

Related Stories: