தலைமை செயலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞர், மு.க.ஸ்டாலின் பேனர்களை அகற்ற உத்தரவிட்ட முதல்வர்: பொதுமக்கள் பாராட்டு

சென்னை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து தலைமை செயலகம் வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அதைதொடர்ந்து தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை  நிறைவேற்றும் வகையில் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், கொரோனா நிவாரண நிதியாக ₹4 ஆயிரம், ஆவின் பால் லிட்டருக்கு ₹3 குறைப்பு உள்ளிட்ட 5 உத்தரவுகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இது பொதுமக்களிடம் நல்ல  வரவேற்பை பெற்றுள்ளது.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று தலைமை செயலகம் வருவதையொட்டி, தலைமை செயலக வளாகத்தில் ஏற்கனவே முதல்வராக இருந்த ஜெயலலிதா படம் அகற்றப்பட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் தற்போது  முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் ஆகியோரது ஆளுயர கட்அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் பேனர்கள் நேற்று காலை அதிரடியாக அகற்றப்பட்டு இருந்தது.

இதுகுறித்து விசாரித்தபோது, ”முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில்  எங்கும் கலைஞர் மற்றும் தன்னுடைய பேனர் வைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர். அரசு அலுவலகத்தில் மட்டும் சிறிய அளவில் புகைப்படம் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி தன்னை (மு.க.ஸ்டாலினை)  விளம்பரப்படுத்துவது போன்று எந்த பேனர்களும் வைக்கக் கூடாது” என்று கூறியுள்ளார். நேற்று அரசு அலுவலக வளாகங்களில் தன்னுடைய பேனர்களை வைக்க கூடாது என்று கூறி அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுபோன்று,  நேர்மையாக, வெளிப்படையாக நடந்து கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Stories:

>