தமிழக முதல்வரின் முதல் ஐந்து அறிவிப்புகள் நாடு பாராட்டும் நல்லாட்சியை மு.க.ஸ்டாலின் வழங்குவார்: திருமாவளவன் வரவேற்பு

சென்னை: நாடு பாராட்டும் நல்லாட்சியை மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்று தமிழக முதல்வரின் முதல் ஐந்து அறிவிப்புக்கு விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் செய்துள்ள முதல் ஐந்து அறிவிப்புகளும் நாடு பாராட்டும் நல்லாட்சியை அவர் வழங்குவார் என்ற நம்பிக்கையை உறுதி செய்திருக்கின்றன. இந்த அறிவிப்புகளை பாராட்டி வரவேற்கிறோம்.  கொரோனாவால் பாதித்துள்ள மக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண நிதியில் முதல்கட்டமாக ₹2 வழங்கப்படும் என்றும் அதனால் ரூ.2 கோடியே 7 லட்சத்து 67 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுமென்றும் முதல்வர் முதல் கோப்பில்  கையெழுத்திட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்ததன் மூலமும், பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்ததன் மூலமும் ஏழை எளிய, நடுத்தர  மக்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார்.அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்வதற்கு ரூ.1200 கோடி செலவிலான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கோப்பில் முதல்வர் கையொப்பமிட்டு இருக்கிறார் .

மக்களின் குறைகளை 100  நாட்களுக்குள் தீர்த்துவைப்போம் என்ற வாக்குறுதிக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக அதற்கென்று தனியே ஒரு துறையை உருவாக்கி ஐஏஎஸ் அதிகாரி ஒருவரையும் அமர்த்தி இருக்கிறார். வாக்குறுதிகள் தருவது வாக்குகளைப்  பெறுவதற்காக மட்டுமல்ல, அவற்றை நிறைவேற்றிக் காட்டுவோம் என்று முதல்வர் நிரூபித்திருக்கிறார். நேற்று முதல்வர் கையொப்பமிட்டுள்ள ஐந்து கோப்புகளும், பிறப்பித்துள்ள ஐந்து ஆணைகளும் தமிழகத்தில் நல்லாட்சி துவங்கிவிட்டது என்கிற நம்பிக்கையை மக்களுக்கு அளித்துள்ளன.  இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories:

>