மத்திய அரசின் பாகுபாடு

இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவை கொரோனா ஆட்டிப் படைத்து வருகிறது. மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளில் கொரோனா, ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது எளிதான காரியம் இல்லை. இந்த விஷயம் முன்கூட்டியே  தெரிந்தும், எதிர்க்கட்சிகள் எச்சரித்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக  இருந்தது ஏன்?.

வளர்ச்சி என்ற பாதையில் பயணித்த இந்தியா, கொரோனாவால் பின்னடைவை சந்தித்து வருகிறது. சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ், அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது தான் ஆச்சரியம். கொரோனா பாதிப்பு  குறைந்தால், அது மத்திய அரசின் வெற்றி என்பதும், அதிகரித்தால் மாநிலங்கள் தான் பொறுப்பு என கூறுவதும் ஏற்புடையதல்ல. கொரோனா வைரஸ் குறித்து ஓராண்டுக்கு மேல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசுக்கு தான், முழு  விவரம் தெரியும். மாநிலங்கள் மீது பழி சுமத்துவதை ஏற்க முடியாது.   

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகம் எடுத்துள்ளது. ஆக்சிஜன் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவிற்கு பல உலக நாடுகள் உதவி செய்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்துகள்  மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சோதனை என்ற பெயரில், நிவாரண பொருட்களை தேக்கம் அடைய செய்ய வேண்டாம். நிவாரண பொருட்களை தங்கு தடையின்றி விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு  மத்திய அரசுக்கு உள்ளது.

முக்கியமாக, வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மருந்து உபகரணம் மற்றும் நிவாரண பொருட்கள் எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு அனுப்பப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை மத்திய அரசு தெரிவிப்பதில் மவுனம்  காப்பது ஏன்?. பாஜ ஆளும், ஆதரவு தரும் மாநிலங்களுக்கு மட்டும் மத்திய அரசு முன்னுரிமை அளிக்கக் கூடாது. அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான தடுப்பூசி, ஆக்சிஜன் உள்பட பல்வேறு வகையான மருந்து பொருட்களை  பாரபட்சமின்றி வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. 2வது அலை கட்டுக்குள் வராத பட்சத்தில், 3வது அலையை தவிர்க்க முடியாது என நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

எனவே  மூன்றாவது அலையில் எந்த மாதிரியான பாதிப்பு நோயாளிகளுக்கு ஏற்படும் என்பதை கண்டறிந்து, அதற்கான உபகரணங்களை தற்போதில் இருந்தே அதிகப்படுத்த வேண்டியது மிக அவசியம். இதில் தாமதம் வேண்டாம். நாடு  முழுவதும் நடமாடும் கொரோனா தடுப்பூசி மையங்களை கொண்டு வர வேண்டும்.  நிதி நெருக்கடியில் உள்ள மாநிலங்களுக்கு உடனே உதவி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. மாநில அரசுகள் உதவி கேட்டும், மத்திய அரசு  காலம் தாழ்த்துவது அல்லது தர மறுப்பது நல்லதல்ல. மாநில அரசுகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்றினால், பரவலை விரைவில் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.

கொரோனா விஷயத்தில் மக்கள் அச்சம் தவிர்த்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மக்களின் ஆதரவோடு தான், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்  நடவடிக்கையில்  வெல்ல வேண்டும், வெல்வோம்.  தமிழகத்தில் நாளை முதல் அமலாக உள்ள முழு ஊரடங்கில், முடிந்தவரை வெளியே செல்லாமல், முகக்கவசம் அணிந்து, சமூக விலகலை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

Related Stories: