×

ஆள்பாதி ஆடைபாதி

நன்றி குங்குமம் தோழி

அந்தக் காலம் இந்தக் காலம் எந்தக் காலமாகட்டும் பெண்களுக்குப் பல புலம்பல்கள் இருந்தாலும், பெரும் புலம்பலாக இருப்பது தங்களுக்கு விருப்பமான முறையில் ஃபிட்டாகவும், சரியாகவும் எந்த டெய்லரும் துணி தைப்பதில்லை என்பதுதான். இதில் ஒரு சில டெய்லர்களே விதிவிலக்கு. ரெடிமேடாக துணிகள் வாங்கினாலும், அது தங்களது உடலுக்கேற்றவாறு ஃபிட்டாக தைத்துக் கொடுக்காத டெய்லர்களிடம்  சண்டையிடும் பெண்களும் உண்டு.

இப்படி பல முறை டெய்லர்களால் மனம் நொந்த திவ்யா, தனக்கான உடையை தானே சரிசெய்ய கற்றுக் கொண்டு, தற்போது அதை மற்றவர்
களுக்கும் செய்து கொடுத்து வருகிறார்.

“குடும்பத்தில் இருக்கும் நபர்கள் கலை சார்ந்து இயங்கியவர்கள். அப்பா கே.எஸ்.செல்வராஜ் திரைப்பட ஒளிப்பதிவாளர். அம்மாவுடைய அப்பா பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சுப்பையா. எனக்கும் கலை சம்பந்தமான ஆர்வம் தானாக அமைந்துவிட்டது’’ என்ற திவ்யாவிற்கு உடையும் கலைநயத்துடன் இருக்க வேண்டுமாம்.

‘‘உடைகள் எப்போதும் ஃபிட்டாகவும், பர்ஃபெக்ட்டாகவும் உடுத்த வேண்டுமென்று ஆசைப்படுவேன். அழகாகத் தெரிகிறோமோ இல்லையோ, பத்து பேர் இருந்தாலும் அதில் தனியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக மெனக்கெடுவேன். அதில் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது ஆடைக்கு. ஆள் பாதி ஆடை பாதி என்று சும்மாவா சொல்லி இருக்காங்க”  என்கிறார் திவ்யா.

‘‘இப்ப இருக்கும் இளைஞர்களுக்கும் தனக்கும் வித்தியாசம் இல்லை என்கிறார் திவ்யா. ஆம், நான் படித்த படிப்பிற்கும் வேலைக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. என்னைப் போல் தான் பல இளைஞர்கள் இன்றுள்ளனர். அவர்களுக்கு வேலை என்றால் எனக்கு உடை. பலருக்கு ரெடிமேட் துணிகள் சரியாக ஃபிட் இல்லாமல் இருக்கும். அதேதான் எனக்கும்.

ஆனால், அதுவே எதிர்காலத்தில் எனக்கான ப்ளஸாக மாறியது. ஒவ்வொரு டெய்லரிடமும் ட்ரெயல் கொடுக்கவே அவ்வளவு செலவு செய்திருப்பேன். அதில் ஒருவர் மட்டுமே நான் என்ன சொல்கிறேன் என்பதை புரிந்து கொண்டார்.  அவரை மேலும் மெருகேற்றி தற்போது பல வேலைகள் அவரை வைத்து செய்து வருகிறேன்’’ என்றவர் குறுகிய காலம் ஃபேஷன் டிசைன் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்துள்ளார்.
 
‘‘அங்கு வேலையில் இருந்த போது தான் பல குறைகள் என் கண்ணுக்குத் தெரிந்தது. அந்த குறைகளை எல்லாம் நாம் செய்யும் போது சரி செய்து கொள்ள வேண்டுமென்று கற்றுக் கொண்டேன். இது வரைக்கும் ஒரு தையல் எனக்கு போட தெரியாது. ஆனால், ஒரு சட்டையின் கார்னரில் என்ன தப்பு இருக்கு, ஆர்ம் ஹோல், ஷோல்டர் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று நுணுக்கமாக கண்டுபிடிப்பேன்.

ஒருவரின்  கான்ஃபிடன்ட் உடைதான்.  விலை உயர்ந்த கண்களை வரிய வைக்கும் பிரமிக்கத்தக்க வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடை அணிந்தாலும், ஃபிட் இல்லையென்றால் அது ஒரு மனக் குறையாக இருக்கும். அதே வேளையில் சாதாரண ஒரு காட்டன் உடையை சரியான அளவோடு அணியும் போது, நம்மை அறியாமலேயே ஓர் நம்பிக்கை நமக்குள் ஏற்படும்.

பலர் இதை உணர்ந்திருப்பார்கள். சட்டை, சுடிதார் லூசாவோ, டைட்டாகவோ இருக்கிறது என்று யாராவது சொன்னால் அதையே நினைத்துக் கொண்டு தனது நம்பிக்கையை இழந்தவராக இருப்பார்கள். எனவே நமது செயல்பாட்டுக்கும், நாம் அணியும் ஒவ்வொரு உடைக்கும் சம்பந்தம் இருக்கிறது. இதில் உள் ஆடைகளும் பொருந்தும்.

பொதுவாக வெளிப்புறத் தோற்றத்தில் செலுத்தும் கவனத்தைப் பலரும் உள்ளாடைகள் வாங்குவதில் செலுத்துவதில்லை. உள்ளாடை எந்த அளவுக்கு தரமானதாகவும், கச்சிதமான அளவிலும் இருக்கிறதோ, அதைப் பொருத்துதான் நம் மேலாடையின் அழகும் வெளிப்படும். கடைகளுக்கு சென்று நமக்குப் பொருத்தமான உள்ளாடையைக் கேட்டு வாங்குவதில் எந்தத் தயக்கமும் காட்டத் தேவையில்லை.

பொதுவாக பெண்கள் பிராவை வாங்கும் போது சரியான அளவைக் கேட்டு வாங்குவதில்லை. மார்பக அளவைவிட சிறிய அல்லது அதைவிட பெரிய அளவுகளை வாங்கிவிடுவார்கள். மார்பகங்களுக்கு சற்று கீழ்புறமாகவும் இடுப்புக்கு மேலும் உள்ள பகுதியில் தான் பிராவைப் பொருத்துகிறோம். பெரும்பாலும் இந்த இடுப்புக்கு மேல் உள்ள அளவைச் சொல்லி பிராவைக் கேட்டு வாங்கும் பெண்கள் தங்கள் மார்பகங்களின் அளவுக்கு தகுந்த கப் சைஸ்கள் கொண்ட பிராவை வாங்குவதில்லை.

இதனால் உடல்ரீதியான தொந்தரவுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. உள்ளாடைகள் அணியும் போது நிறத்தில் கவனம் செலுத்துவது அவசியம். அதாவது, வெளிர் நிற ஆடைகளுக்கு வெளிர் நிறங்களிலும் அடர்நிறங்கள் கொண்ட ஆடைகளுக்கு அடர் நிறங்களிலும் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. பொதுவாக வெள்ளை மற்றும் சந்தன நிற உள்ளாடைகள் பார்க்க உறுத்தலாக இருக்காது.

புடவை, சுடிதார், வெஸ்டர்ன் ஆடைகள், டி-ஷர்ட் என ஆடை தேர்வுக்கு ஏற்ப பிராவையும் செலக்ட் செய்வது நல்லது. பெண்கள் பலர் ஆடைகளுக்கும், அதற்கான அணிகலனுக்கும் அதிக அளவில் செலவு செய்கிறார்கள். ஆனால் அதை சரியாக மேட்ச் செய்ய தெரியாது. அதை பயன்படுத்தும் போது பொருத்தமற்றதாக இருக்கிறது.

ஒரு சிலரே சரியான தேர்வு செய்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், பலருக்கு சேலை கட்டுவதுகூட தெரிவதில்லை. இதை பார்த்து என் நண்பர்கள் பலருக்கு உதவி இருக்கிறேன். அப்பதான் அவர்கள், ‘இதை ஏன் நீ பிசினசாக செய்யக்கூடாது’ என்றார்கள். அதன் பின்தான் பிளவுஸ்களில் வேலைப்பாடுகள் செய்ய ஆரம்பித்தேன்.

அதற்காக மாஸ்டர் மற்றும் டெய்லர் ஒருவர் இணைந்தார்கள். அவர்களை பயன்படுத்தி பல திருமணங்கள், போட்டோ ஷூட் போன்றவற்றுக்கு உடை, பிரைடல், ஹேர் ஸ்டைல் என ஆலோசகராக  மாறினேன்” என்கிறார் திவ்யா.

நண்பர்கள் வட்டாரத்தில் மட்டும் இதை செய்து வரும் திவ்யா, உபயோகப்படுத்திய சேலைகளை ரீ சைக்கிள் செய்து, அந்த உடைக்கு புது வடிவம் கொடுக்கிறார். அதில் சல்வார், கவுன், டிசைனர் சேலை என மாற்றம் அடைய வைக்கிறார். ‘‘ஒருவரின் நிறம், உடல்வாகுக்கேற்றவாறு உடை அணிய வேண்டும், எல்லோருக்கும் எல்லாவிதமான ஆடைகள் அணிய வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.

அந்த ஆடை தனது நிறம், பெர்சனாலிட்டிக்கு ஏற்றார் போல் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்படும். அவர்களுக்கு நேரில் சென்று வாங்கி, அதை தைத்துக் கொடுக்கிறோம். அப்படி குழப்பம் உள்ளவர்கள்  தங்களை போல் உள்ளவர்களை  முன் மாதிரியாகக் கொண்டு, விருப்பமான உடைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஒரு பிளவுஸ் ஒர்க் பண்றேன்னா, அவங்களுக்கு அது இரண்டு மூன்று சேலைக்கு யூஸ் பண்ணும்படி ஐடியா கொடுத்துத்தான் பண்ணுவேன். டிசைனர், டிரெடிஷ்னல் என இரண்டுக்கும் பொருந்தும்படி அது இருக்கும். திருமணத்திற்கு பின் பலர் சரியான உடை கிடைக்காது என்று நினைப்பார்கள். அப்படியெல்லாம் கிடையாது. ஃபிட்டிங்தான் முக்கியம். அதை சரியாக புடித்துக் கொண்டால் இதெல்லாம் காணாமல் போய்விடும்.

உடைக்கு ஏற்றார் போல் பேக், கம்மல், ஆபரணங்கள் என தேர்வு செய்து கொடுக்கிறோம். அதேபோல் தைக்கும் துணியின் குவாலிட்டி முக்கியம். தொடும் போதே அதை உணரலாம். டிசைனுக்கு ஏற்றார் போல் கற்கள் பதித்தும் வேலைப்பாடுகள் செய்து வருகிறோம். ஹேண்ட் மேடாக செய்து வரும் இந்த வேலைகளை வீட்டில் வைத்துத்தான் செய்து கொண்டிருக்கிறேன். பெரிய அளவில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது” என்றார் திவ்யா.

தொகுப்பு: அன்னம் அரசு


படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!