குஜராத்தில் அதிக பாதிப்பு கொரோனா நோயாளிகளின் பார்வையை பறிக்கும் பங்கஸ்

அகமதாபாத்: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், குணமடைந்து வீடு திரும்பியவர்களும் ‘மியூகோர்மைகோசிஸ்’ எனப்படும் கறுப்பு பங்கஸ் தொற்று பாதிக்கப்பட்டு, அவரது கண்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள், மருத்துவ சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். அவர்கள் தற்போது புதிய சிக்கலை எதிர்கொள்கின்றனர். அதாவது, ‘மியூகோர்மைகோசிஸ்’ அல்லது கறுப்பு பங்கஸ் தாக்குதலுக்கு ஆளாகும் நோயாளிகளில் பலரது கண்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், மீண்டும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர்கள், கண் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கண்ணை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உயிரே போய்விடும் என்று கூறுகின்றனர். அதனால், கண் பாதிப்பு ஏற்பட்ட பல நோயாளிகள் கண் அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில், கடந்த 15 நாட்களில் 40க்கும் மேற்பட்ட குணமடைந்த கொரோனா நோயாளிகளுக்கு ‘கறுப்பு பங்கஸ்’ நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இவர்களில், 8 பேரின் கண்களை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். அகமதாபாத், வதோதராவில் 44 பேர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள், ரத்த புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ‘மியூகோர்மைகோசிஸ்’ பாதிப்பு இருந்தது. இதேபோன்ற பாதிப்பு டெல்லியின் கங்காராம் மருத்துவமனையில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா சிகிச்சையின் போது அதிகப்படியான மருந்தை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் இந்த பங்கஸ் பாதிப்பு ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றால், எளிதில் இந்த ‘மியூகோர்மைகோசிஸ்’ தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

* அறிகுறி என்ன?

இந்த பங்கஸ் பாதிப்பு அறிகுறி என்னவென்றால், தாங்க முடியாத அளவிற்கு தலைவலி ஏற்படும், கண்கள் சிவப்பு நிறமாக மாறும். கண்ணில் நீர் வடியும். எனவே, ‘மியூகோர்மைகோசிஸ்’ தொற்று அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

Related Stories: