உலகிலேயே மிக மோசமான பாதிப்பில் இந்தியா ஒரே நாளில் 4,187 பேர் மரணம்: தொடர்ந்து 3வது நாளாக 4 லட்சம் பேருக்கு தொற்று

புதுடெல்லி: கொரோனா 2வது அலையில் உலகிலேயே மிக மோசமான பாதிப்பை இந்தியா சந்தித்து வருகிறது. தொடர்ந்து 3வது நாளாக தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,187 பேர் பலியாகி இருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா 2வது அலை இந்தியாவில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் முறையாக தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது. அதற்கடுத்த நாட்களில் சற்று குறைந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து 4 லட்சத்துக்கும் அதிகமாக இருந்து வந்தது.

இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாக நேற்று தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து ஆயிரத்து 522 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 2 கோடியே 18 லட்சத்து 92 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பலி எண்ணிக்கை அதிகரித்த நிலையில், நேற்று முதல் முறையாக தினசரி பலி 4 ஆயிரத்தை தாண்டி மோசமான சாதனை படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 4,187 பேர் பலியாகி உள்ளனர். இதுவே இதுவரை பலியான அதிகபட்ச தினசரி பலியாகும்.

மேலும், அமெரிக்கா, பிரேசிலுக்குப் பிறகு தினசரி பலி 4 ஆயிரத்தை தாண்டியிருப்பது இந்தியாவில் மட்டுமே. அமெரிக்காவில் கடந்த ஜனவரி 12ம் தேதி ஒரே நாளில் 4,490 பேர் பலியாயினர். அதுவே ஒருநாள் பலியில் உலக அளவில் அதிகபட்சமாகும். அதையும் இந்தியா மிஞ்சி உலகிலேயே மோசமான பலி எண்ணிக்கையை நோக்கி நகர்வது மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளது. அதுமட்டுமின்றி, முதல் அலையில் ஓராண்டாக ஏற்பட்ட பாதிப்பை 2வது அலை வெறும் 82 நாளில் முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை 1 கோடியே 9 லட்சத்து 16 ஆயிரத்து 481 பேர் பாதிக்கப்பட்டனர்.

பிப்ரவரி 14ம் தேதிக்குப் பிறகு ஆரம்பித்த 2வது அலையில் தற்போது வரை 82 நாளில் 1 கோடியே 9 லட்சத்து 68 ஆயிரத்து 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் பிப்ரவரி 14க்குப் பிறகு மட்டுமே 82,000 பேர் பலியாகி உள்ளனர். பிப்ரவரி 14 வரை மொத்த பலி கிட்டத்தட்ட 1.50 லட்சமாக இருந்த நிலையில், தற்போது மொத்த பலி 2 லட்சத்து 38 ஆயிரத்து 270 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 89 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 30 ஆயிரத்து 960 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 37 லட்சத்து 23 ஆயிரத்து 446 பேராக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்வதாக உறுதி அளித்துள்ளது.

* 3வது அலையை தடுக்கலாம்

கொரோனா 2வது அலை தீவிரமாக இருப்பதால், 3வது அலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது என மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் கடந்த 2 நாட்களுக்கு முன் கூறியிருந்தார். இந்நிலையில், அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில், ‘‘கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் 3வது அலையை எல்லா இடத்திலும் பரவாமலும், எங்கேயுமே பரவாமலும் கூட தடுக்க முடியும். அதற்கு, வழிகாட்டு நெறிமுறைகளை எந்தளவுக்கு தீவிரமாக செயல்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே இது அமையும்’’ என கூறி உள்ளார்.

* பெண் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று

ஐதராபாத்தில் உள்ள விலங்குகள் சரணலாயத்தில் 5 சிங்கங்களுக்கு கொரானோ தொற்று உறுதியான நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஈடவாவில் 2 பெண் சிங்கங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈடவா சபாரி பார்க்கில் உள்ள 14 சிங்கங்களுக்கு கடந்த 5ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 பெண் சிங்கங்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. உடனடியாக அந்த சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

* முதல்வர்களுடன் மோடி ஆலோசனை

கொரோனா மேலாண்மை குறித்து கடந்த சில தினங்களாக மாநில முதல்வர்களுடன் தொலைபேசி வழியே பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்படி பிரதமர் மோடி நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங், ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர், மகராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோருடன்  ஆலோசனை நடத்தினார். மாநிலங்களில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு போதுமான நடவடிக்கைகள் எடுக்கும் என்று மோடி உறுதி அளித்தார்.

* ஸ்புட்னிக் வி ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அனுமதியா?

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஜூன் மாதத்திலிருந்து பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஸ்புட்னிக் லைட் என்ற ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அதன் தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இது 80% செயல்திறன் கொண்டதாக பரிசோதானையில் உறுதியாகி உள்ளதாக கூறி உள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், ‘‘ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அனுமதி கோரினால் அதனை ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும். இந்த தடுப்பூசியை ஒரு டோஸ் போட்டால் மட்டும் போதும் என்பதால் இந்தியாவில் தடுப்பூசி இயக்கத்தை வேகப்படுத்தும். ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியும் ஒற்றை டோஸ் கொண்டது. அதற்கு அனுமதி தருவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசிகள் 2 டோஸ் போட வேண்டுமென்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பெற நீண்ட நாட்கள் ஆவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: