கடந்த 6 மாதமாக மத்திய அரசு செயல்படாததே கொரோனா பரவலுக்கு காரணம்: மே.வங்கத்தை கைப்பற்ற குறியாக இருந்தனர் என மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: மத்திய அரசு கடந்த 6 மாதமாக செயல்படாமல் இருந்ததன் விளைவாகத்தான் கொரோனா பிரச்னை எழுந்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, மம்தா பானர்ஜி 3வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று நடந்தது. பேரவையில் முதல்வர் மம்தா பேசியதாவது: தேர்தல் ஆணையம் நேரடியாக பாஜவிற்கு உதவாமல் இருந்திருந்தால் அவர்களால் 30 தொகுதிகளில் கூட வெற்றி பெற்று இருக்க முடியாது. இந்த தேர்தலில், தேர்தல் குழுவின் கண்காணிப்பில் சில இடங்களில் மோசடி நடந்தது.

இவை தேர்தல் ஆணையத்தை சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. மக்களின் கட்டளையை அவர்களால் ஏற்க முடியவில்லை. தேர்தல் பணியில் ஈடுபட்ட மத்திய படையினர் கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை. இதன் காரணமாக தான் மாநிலத்தில் தொற்று பரவியது. வங்கத்தில் இரட்டை என்ஜின் அரசை அமைப்பதற்காக அவர்கள் நாட்டை அழிவின் விளிம்பிற்கு தள்ளியுள்ளனர். கடந்த 6 மாதங்களாக மத்திய அரசு எந்த வேலையையும் செய்யவில்லை. மத்திய அமைச்சர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தை கைப்பற்றுவதற்காக தினமும் இங்கே வந்து சென்று கொண்டிருந்தனர். இதுவே கொரோனா பரவலுக்கு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

>