பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா நோயாளிக்கு உதவிய கேரள இளம்பெண், வாலிபர்: முதல்வர் உள்பட பலரும் பாராட்டு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள புன்னப்ரா கூட்டுறவு பொறியியல் கல்லூரி விடுதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு 87 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தங்கி இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக டிஒய்எப்ஐ இயக்கத்தை சேர்ந்த அஷ்வின் (23), ரேகா (21) ஆகியோர் சென்றனர். அப்போது தமிழ்நாடு கரூரை சேர்ந்த ஒரு வாலிபர் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அஷ்வினும், ரேகாவும், தங்களது பைக்கில் வைத்து வாலிபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அவர்கள் கவச உடை அணிந்து வந்திருந்தனர். இதனால் கொரோனா வார்டுக்கு சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த வாலிபரை வெளியே தூக்கி வந்து பைக்கில் அமர வைத்தனர். அஷ்வின் பைக்கை ஓட்டினார்.

ரேகா பின்னால் இருந்து அந்த வாலிபரை பிடித்துகொண்டார். அவர்கள் 2 நிமிடத்தில் அந்த வாலிபரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக டாக்டர்கள் கூறினர். ஆம்புலன்சுக்கு காத்திருக்காமல் கொரோனா நோயாளியை பைக்கில் அழைத்து சென்று அவரது உயிரை காப்பாற்றிய அஷ்வின், ரேகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. முதல்வர் பினராய் விஜயன் உள்பட பலர் அவர்களை பாராட்டினர்.

Related Stories: