கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்து ஆந்திராவில் 10 பேர் உடல் சிதறி பலி

திருமலை: கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்து 10 பேர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், கலசப்பாடு மண்டலத்தில் உள்ள மாமிலப்பள்ளே கிராமத்தில் கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் வெடிவைத்து பாறைகளை உடைப்பதற்காக பத்வேலில் இருந்து லாரியில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடி பொருட்கள் நேற்று காலை கொண்டு வரப்பட்டது. இவற்றை கல்குவாரியில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று காலை 10.30 மணியளவில் இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடி பொருட்கள் வெடித்தது. இதில், 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த கடப்பா போலீஸ் எஸ்பி அன்புராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து கடப்பா எஸ்பி அன்புராஜன் கூறியதாவது: கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடி பொருட்கள் வெடித்ததில் கலசப்பாடு மண்டலத்தில் உள்ள காங்காப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரசாந்த்(35), புலிவெந்துலா கிராமத்தை சேர்ந்த பிரசாந்த்(40), சுப்பாரெட்டி(40), பாலகங்கா(35) மற்றும் வெங்கட்ரமணா(25) உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.

உடல்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் அடையாளம் காண முடியவில்லை. அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடி பொருட்கள் வெடித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடி பொருட்கள் கொண்டு வந்த லாரி உரிய அனுமதியுடன் கொண்டு வரப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகிறோம். உயிரிழந்தவர்கள் அனைவரும் முதல்வர் ஜெகன்மோகனின் சொந்த ஊரான புலிவெந்துலாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* முதல்வர் இரங்கல்

இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்த முதல்வர் ஜெகன்மோகன் காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்ய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>