நுரையீரலை பாதிக்கும் நோய் மட்டுமல்ல... ஆபத்தான ரத்தம் உறைதலையும் ஏற்படுத்தும் கொரோனா வைரஸ்: நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் நுரையீரலை பாதிக்கும் நோய் மட்டுமல்ல, உயிருக்கு ஆபத்தான ரத்த உறைதல் பாதிப்பையும் ஏற்படுத்தும் என நிபுணர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் மனிதனின் நுரையீரலை தாக்கும் நோயாக கருதப்படுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பலவீனமானவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணிக்கின்றனர். இந்த நிலையில், கொரோனா நுரையீரலை தாக்கும் நோய் மட்டுமல்ல, உயிருக்கே ஆபத்தான ரத்த உறைதலை ஏற்படுத்தும் நோயும் கூட என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா தொற்று ஆரம்பித்ததில் இருந்தே இதுதொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் முடிவில் தற்போது கொரோனா ரத்தத்தை உறையச் செய்து, உயிருக்கே உலை வைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் 14-28 சதவீதம் பேருக்கு ஆழமான நரம்பு ரத்த உறைவு ஏற்படுவதாகவும், 2-5 சதவீதத்தினருக்கு தமனி ரத்த உறைவு ஏற்படுவதாகவும் உலகளாவிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வாரத்திற்கு சராசரியாக ஐந்து அல்லது ஆறு நோயாளிகளுக்கு இதுபோன்ற ரத்த உறைதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெல்லியின் கங்கா ராம் மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் அம்பரிஷ் கூறி உள்ளார்.

டைப்-2 நீரிழிவு நோய் போன்ற பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு ரத்த உறைவு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். நம் உடலில் ரத்த உறைவு ஏற்படுவதால் பக்கவாதம் முதல் மூளை செயலிழப்பு வரை ஏற்படுகிறது. ரத்த உறைவு என்பது கை, கால் மற்றும் இதயம், மூளை போன்ற இடங்களில் கூட ஏற்படலாம். கொரோனா நோயாளிகன் மூட்டு தமனிகளில் ரத்தம் உறைதல் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு கை, கால்களில் ரத்தம் கட்டுவதால், கை, கால்களை இழக்க நேரிடும். முடக்குவாதம் ஏற்படும்.

இதயத்திலும் ரத்த அடைப்பை கொரோனா ஏற்படுவதால் கொரோனா நோயாளிகள் பலருக்கு மாரடைப்பு நிகழ்கிறது. இதே போல நுரையீரலிலும், மூளையில் ரத்தத்தை உறையச் செய்து, ரத்த ஓட்டை கொரோனா வைரஸ்கள் நிறுத்துகின்றன. ரத்த நாளங்களில் ரத்தத்தை உறையச் செய்ய கட்டி போல கொரோனா வைரஸ்கள் ஆக்குகின்றன. இதுபோன்ற ரத்த நாளங்கள் உடல் முழுவதும் இருப்பதால், இந்த கட்டிகள் எங்கு உருவாகக் கூடும் என்பதை கணிப்பது சிக்கலானது என்கின்றனர் நிபுணர்கள். ரத்த உறைவு என்பது உங்கள் ரத்தத்தின் சில பகுதிகள் தடிமனாகி ஒரு திரவத்திலிருந்து ஜெல் போன்ற அல்லது செமிசாலிட் நிலைக்கு மாறும்போது உருவாகும் ரத்தக் கட்டிகள் ஆகும். இந்த காரணங்கள் ரத்த உறைவு உருவாக்கத் தூண்டும்.

Related Stories: