முழு ஊரடங்கு அறிவிப்பால் 2வது ஆண்டாக ஊட்டி மலர் கண்காட்சி ரத்தாகிறது

ஊட்டி: நாளை முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், இரண்டாவது ஆண்டாக ஊட்டி மலர் கண்காட்சி ரத்தாகிறது. நீலகிரிக்கு கோடை விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டு தோறும் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி, மலர், ரோஜா கண்காட்சி, பழக் கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது. வருவாய்த்துறை சார்பில் வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்படும். சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டிகள், படகு அலங்கார போட்டிகள் நடத்தப்படும். அதேபோல், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் ஒரு மாதம் ஊட்டியில் மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கோடை விழா நடத்தப்படும். பொதுவாக ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் காய்கறி கண்காட்சியுடன் கோத்தகிரியில் கோடை விழாவும் துவங்கும்.

ஆனால், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மே மாதம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து கண்காட்சிகள் மற்றும் கோடை விழா ரத்து செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதத்திற்கு பின் கொரோனா பாதிப்பு  சற்று குறைந்திருந்த நிலையில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் வரை சுற்றுலா பயணிகள் ஊட்டி வர அனுமதிக்கப்பட்டனர். இதனால், பூங்காவில் வழக்கமான கூட்டம் காணப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் இம்முறை மலர் கண்காட்சி உட்பட அனைத்து கண்காட்சிகளும் நடத்தப்படும் என்றும், கோடை விழாவும் நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இதற்காக தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டன. ஆனால், கொரோனாவின் 2வது அலை விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. அதேபோல், சுற்றுலா தலங்களும் கடந்த மாதம் முதல் மூடப்பட்டன. கொரோனா பாதிப்பு குறைந்தால், இம்முறை மலர் கண்காட்சி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ள நிலையில், நாளை முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஊட்டியில் மலர் கண்காட்சி நடத்த வாய்ப்பில்லை. 2வது ஆண்டாக தற்போதும் ரத்தாகிறது. தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மலர் கண்காட்சி உட்பட அனைத்து கண்காட்சிகளுக்காகவும் பூங்காக்கள் தயார்படுத்தப்பட்டன. ஆனால், கொரோனா  பாதிப்பு காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர தடையுள்ளது. சுற்றுலா தலங்கள் திறக்கவும் தடையுள்ளது. தற்போது முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இம்முறை மலர் கண்காட்சி உட்பட அனைத்து கண்காட்சிகளும் நடத்த வாய்ப்பில்லை’’ என்றனர்.

Related Stories: