நெல்லை அரசு மருத்துவமனைக்கு இஸ்ரோவில் இருந்து மேலும் 7 டன் ஆக்சிஜன் வந்தது

நெல்லை: கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் 800க்கும் மேற்பட்டோர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர். தேவை அதிகரித்துள்ளதால் இஸ்ரோவில் இருந்து நேற்று மேலும் 7 டன் ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நெல்லை அரசு மருத்துவமனையில் 1240 கொரோனா சிகிச்சை படுக்கைகள் உள்ளன. இவற்றில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சையளிக்கும் 800 படுக்கைகள் நேற்று காலை நிரம்பின. இங்கு கொரோனாவுக்கு முந்தைய சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு அரை டன் (500 கிலோ லிட்டர்) ஆக்சிஜன் மட்டுமே தேவைப்பட்டது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 7 டன்னுக்கு அதிகமான அளவுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.  

இதனால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள 19 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய ஆக்சிஜன் கலன்களில் இருப்பு வேகமாக காலியாகிறது. தேவையை சமாளிக்க தஞ்சாவூரில் இருந்தும், நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்தும் மருத்துவ ஆக்சிஜன் டேங்கர் லாரிகளில் தினமும் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை இஸ்ரோவில் இருந்து மேலும் 7 டன் ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டது. இது ஒருநாள் தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதால் தொடர்ந்து தினமும் 7 டன்னுக்கு குறையாமல் ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: