கள்ளச்சந்தையில் விற்பதற்காக காரில் ரெம்டெசிவிர் மருந்து கடத்திய ஐடி நிறுவன மேலாளர் சிக்கினார்: ஓசூரில் போலீசார் அதிரடி

ஓசூர்:  ஓசூரில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்வதற்காக வந்த ஐடி நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 9 பாட்டில் மருந்து, காரை பறிமுதல் செய்த போலீசார், இதில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளது. இதன் அருகில் நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரு சென்ற காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து 9 பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரில் வந்த நபரை போலீசார் பிடித்து, ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பேகூர் சாலையில் உள்ள ஏலனஹள்ளி நிரஞ்சன் ஜெனிசிஸ் அபார்ட்மெண்ட்டை சேர்ந்த ஆனந்த் பாலாஜி(36) என்றும், பெங்களூரு தனியார் ஐ.டி நிறுவன மேலாளர் என்றும், வங்காளதேசத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரெம்டெசிவிர் மருந்தை, கர்நாடகாவுக்கு வாங்கி சென்றதும், தேவைப்படும் நபர்கள் போன் செய்ததால், ஓசூருக்கு விற்பனை செய்வதற்காக காரில் 9 ரெம்டெசிவிர் பாட்டில்களுடன் வந்ததும் தெரியவந்தது.

கள்ளச்சந்தையில் ஒரு பாட்டில் ரெம்டெசிவிர் மருந்து ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஆனந்த் பாலாஜியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கார், 9 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, ஓசூரில் உள்ள யாருக்கு ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்களை ஆனந்த் பாலாஜி விற்பனை செய்வதற்காக வந்தார் என்பது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: