14 நாட்கள் முழு முடக்கம் என்பதை மனதில் வைத்து பலரும் மொத்தமாக மதுபானங்களை வாங்கி குவிப்பு

சென்னை: முழு ஊரடங்கின் காரணமாக திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதால் மது குடிப்போர் இன்றே மது பானங்களை வாங்க குவிந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டு முண்டியடித்து மதுபாட்டில்களை வாங்கினர். 14 நாட்கள் முழு முடக்கம் என்பதை மனதில் வைத்து பலரும் மொத்தமாக வாங்கி சாக்கு மூட்டைகள், அட்டைப்பெட்டிகள் மற்றும் வாகனங்களில் அடுக்கிவைத்து மதுபாட்டில்களை கொண்டு சென்றனர்.

தமிழக அரசின் முழு ஊரடங்கு அறிவிப்பால், கோவையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள், எலைட் மது விற்பனைக் கடைகளில் மதுப்பிரியர்கள் இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனுடன் இணைக்கப்பட்டு இருந்த மதுக்கூடங்கள், சில வாரங்களுக்கு முன்னரே, மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இந்த ஊரடங்கு காலத்தில் கடந்த சில நாட்களாக காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதால் இன்று மற்றும் நாளை மட்டும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: