தான்சானியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.100 கோடி ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்

மீனம்பாக்கம்: தான்சானியா நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி மதிப்புடைய 15.6 கிலோ ஹெராயின் போதை பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தான்சானியா நாட்டை சேர்ந்த பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்தது. அதில் அதிகளவில் போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாகவும், சர்வதேச போதை பொருள் கடத்தும் கும்பல் ஈடுபட்டுள்ளதாகவும் விமான நிலைய சுங்க துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க துறையினர், அந்த விமானத்தில் வந்த 113 பயணிகளையும் தீவிரமாக கண்காணித்தனர். மேலும், சந்தேகத்துக்கு இடமான பயணிகளை நிறுத்தி, அவர்களது உடமைகளை சோதனையிட்டனர். அப்போது, தான்சானியாவை சேர்ந்த டொபோரா இளையா (46), பிலீக்ஸ்  ஒபடியா (45) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இவர்கள், தான்சானியாவில் இருந்து கத்தாருக்கு வந்து, அங்கிருந்து சென்னைக்கு வந்துள்ளனர்.

இங்கிருந்து உள்நாட்டு விமானத்தில் பெங்களூர் செல்வதற்கான விமான டிக்கெட் வைத்திருந்தனர். இருவரையும் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். அவர்கள் வைத்திருந்த டிராலி டைப் சூட்கேஸ்களை சோதனையிட்டனர். அதன் ரகசிய அறைக்குள் ஹெராயின் போதை பவுடர் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இருவரது சூட்கேஸ்களில் இருந்து 15.6 கிலோ ஹெராயின் போதை பொருளை கைப்பற்றினர். சர்வதேச மதிப்பு ரூ.100 கோடி. இதையடுத்து பெண் உட்பட 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள், சர்வதேச போதை பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், சென்னை வழியாக கர்நாடகாவுக்கு கடத்தி செல்ல இருப்பதும் தெரிந்தது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. ரூ.100 கோடி மதிப்புடைய போதை பொருள் கைப்பற்றப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: