கொரோனா பரிசோதனை அச்சத்தால் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை: மதுரவாயலில் சோக முடிவு

பூந்தமல்லி: சென்னை மதுரவாயல் வேல் நகர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (70). இவரது மனைவி அஞ்சலை (60). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இவரது உறவினர் ஒருவர் இவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது சமையல் அறையில் இரண்டு பேரும் தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் வந்த போலீசார், வயதான தம்பதியினரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த மூன்று தினங்களாக அஞ்சலைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து விட்டு வந்துள்ளனர். தங்களுக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சம் காரணமாகவும், மேலும், கொரோனா பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் தங்கள் இருவரையும் தனியாக பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருவரும் இருந்துள்ளனர். இதன் காரணமாக இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவர்களது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள்  உள்ளனவா என்ற கோணத்திலும்  விசாரணை செய்து வருகின்றனர். தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில்  வயதான தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>