கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை..! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 11.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 11.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா தொற்றை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டம் கூடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வரும் என்ற இக்கட்டான சூழலில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். பொறுப்பேற்ற முதல் நாளே தான் கொடுத்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றினார்.

அதுமட்டுமில்லாமல், கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ அதிகாரிகளுடனும் நிபுணர் குழுவுடனும் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார். அதோடு, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்திருக்கிறார். ஊரடங்கால் மக்கள் பாதிக்காத வண்ணம் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் இயங்க அனுமதி வழங்கி இருக்கிறார்.

கடந்த ஒரு மணி நேரத்துக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டுமென தான் மன்றாடி கேட்டுக் கொள்வதாக கூறியிருந்தார். வீட்டிலேயே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் நோயில் இருந்து தன்னை காப்பதுடன் தம்மை சுற்றியுள்ளவர்களை காப்பதும் அவசியம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை 11:30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: