தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்திலும் கொரோனா தடுப்பூசி போடப்படும் : மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

சென்னை : சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போதைய சூழலில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ரெம்டெசிவர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் மட்டுமே அந்த மருந்து விற்பனை செய்யப்படுவதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக, தற்போது 5 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.  மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படும்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடம் கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. பேரிடர் காலத்தில் இருந்து மக்களை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். முழு ஊரடங்கு காலத்திலும் கொரோனா தடுப்பூசி போடப்படும். ஆம்புலன்ஸில் வரும் நோயாளிகளை விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 15ம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயாராகிவிடும். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் கொரோனா தடுப்பூசி பணிகள் தொடரும், எனத் தெரிவித்தார்.

Related Stories: