‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ புதிய துறை உருவாக்கம் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் நியமனம்

சென்னை: ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ புதிய துறை உருவாக்கம் செய்து, அந்த துறையின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசாரம் செய்தார். அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் குறைகளை தீர்ப்பதே எனது முதல் பணி என்று கூறினார். மேலும் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக போடும் வகையில் பெட்டி ஒன்றை பிரசாரத்தில் வைத்தார். இந்த பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலின், இந்த பெட்டியில் போடப்படும் மனுக்களை அந்தந்த துறையிடம் ஒப்படைத்து 100 நாட்களில் குறைகள் தீர்க்கப்படும். இதற்காக தனித்துறைகள் உருவாக்கப்படும் என்று மக்களிடம் உறுதியளித்தார். மாநிலம் முழுவதும் நடந்த இந்த பிரசார கூட்டத்தில் லட்சக்கணக்கான மனுக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டன.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்ைமயுடன் அமோக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் உடனடியாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் நடந்த பிரசார கூட்டத்தில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘‘முதல்வர் தேர்தல் பரப்புரையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களுக்குள் ஆய்வு செய்து கோரிக்கைகளை நிறைவேற்றிட புதிய துறை ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.

அதன்படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை தலைமை செயலகத்தில் உருவாக்கப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை இணை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார். இவர், முதல்வரின் நேரடி கண்காணிப்பில் பணியாற்றுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: