முதல்வரின் செயலாளர்கள் 4 பேர் நியமனம்: அரசு உத்தரவு

சென்னை: முதல்வரின் செயலாளர்களாக முதன்மை செயலாளர் உதயசந்திரன், உமாநாத் உட்பட 4 பேரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதை தொடர்ந்து அவர் முதலாவதாக 5 அறிவிப்புகளுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.  இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அரசின் நிர்வாக பணிகளில் தனக்கு உதவியாக நேர்மையான மற்றும் திறமையான அதிகாரிகளை செயலாளர்களாக நியமிக்க திட்டமிட்டிருந்தார். அதன்படி, தற்போது, முதல்வரின் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோரை நியமனம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது உத்தரவில் கூறியிருப்பதாவது: தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் முதல்வரின் செயலாளர் I, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் உமாநாத் முதல்வரின் செயலாளர் II, அருங்காட்சியக ஆணையர் எம்.எஸ்.சண்முகம் முதல்வரின் செயலாளர் III, தொழில்துறை ஆணையர் அனுஜார்ஜ் முதல்வரின் செயலாளர் IV ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வரின் செயலாளர்  I ஆக நியமிக்கப்பட்டுள்ள உதயசந்திரன்.  ஈரோடு, மதுரை மாவட்ட கலெக்டராக இருந்துள்ளார். மேலும், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தமிழ்நாடு பாடநூல் கழகம், செய்தி மக்கள் தொடர்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியில் இருந்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்ட அவர் சமச்சீர்  கல்விக்கு வித்திட்டார். கீழடி அகழாய்வு விவகாரத்தில் மிகுந்த பங்களிப்பை வழங்கி அகழாய்வை விரிவுபடுத்தினார். டிஎன்பிஎஸ்சி செயலாளராக இருந்த போது, பல புதுமைகளை தமிழ்நாடு தேர்வாணையத்தில் கொண்டு வந்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர், 1995 பேட்ஜ்  ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் செயலாளர் II ஆக நியமிக்கப்பட்டுள்ள உமாநாத் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர். இவர், கோவை மாவட்ட கலெக்டராக இருந்துள்ளார்.  மாவட்ட நிர்வாகங்களில் பல்வேறு சீரமைப்பு பணிகளை கொண்டு வந்து பெயர் பெற்றார். இவர் மருத்துவ துறையில் பணிபுரிந்துள்ளார்.  மருத்துவரான இவர் 2001 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் செயலாளர் III ஆக  நியமிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.சண்முகம் சென்னையை சேர்ந்தவர். இவர், எம்ஏ பொருளாதாரம் பயின்றுள்ளார். இவர் கடந்த 2002 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர்,  பாரத் டெண்டர் பிரச்னை வந்த போது நியாயமாக  நடந்து கொள்ள அழுத்தம் கொடுத்தார். மேலும், டெண்டர் ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்து போட மறுத்தார். இதனால், அவர் அருங்காட்சிய ஆணையராக  பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் செயலாளர் IV ஆக நியமிக்கப்பட்டுள்ள அனுஜார்ஜ் கேரளாவை சேர்ந்தவர். இவர், எம்ஏ எம்பில் சமூகவியல் படித்துள்ளார். 2003ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாாக பணியில் சேர்ந்தார். இவர், முன்னாள் முதல்வர் கலைஞர் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை ஐஏஎஸ் அதிகாரி அமுதாவுடன் இணைந்து கவனித்துக்கொண்டார். குறுகிய காலமே இருந்த நிலையில் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார். இவர், அரியலூர் கலெக்டராகவும், பொதுத்துறை இணை செயலாளராகவும், தமிழ்நாடு சர்க்கரை கழக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறுிப்பிடத்தக்கது.

Related Stories:

>