தமிழகத்திற்கு தேவையான 476 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை உடனே வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை : தமிழகத்திற்கு தேவையான 476 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பது கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உங்கள் அவசர கவனத்திற்கு கொண்டு வருகிறேன். ​​ தமிழகத்தின் மருத்துவ ஆக்சிஜனின் தினசரி தேவை சுமார் 440 மெட்ரிக் டன் ஆகும். இது அடுத்த 2 வாரங்களில் மேலும் 400 மெட்ரிக் டன் அதிகரிக்கும். எனவே சுமார் 840 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, தேசிய ஆக்சிஜன் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கான ஒதுக்கீடு 220 மெட்ரிக் டன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதால், மே 1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழக அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் மத்திய அரசு குறைந்தது 476 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை உடனடியாக மாநிலத்திற்கு வழங்க ஒப்புதல் அளித்தது. ஆனால், தமிழகத்திற்கு இன்னும் வழங்கப்படவில்லை.  அதனால் உடனடியாக 476 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை தமிழகத்திற்கு தர வேண்டும். தமிழகத்தின் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்ட பல்வேறூ விஷயங்கள் தொடர்பாக தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கேரளாவில் இருந்து  கஞ்சிகோடு ஐநாக்ஸ் (ஐஎன்ஓஎஸ்)  என்ற இடத்தில் இருந்து அடுத்த 4 நாட்களுக்கு குறைந்தபட்சம் 40 மெட்ரிக் டன் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

ஸ்ரீபெரும்புதூர் பிராக்சேர் நிறுவனத்தில் இருந்து  60 மெட்ரிக் டன் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும். இதில் 20 மெட்ரிக் டன் அடுத்த 2 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இடைக்கால தேவையான ரூர்கேலா இரும்பு எஃகு தொழிற்சாலையில் இருந்து 120 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை வழங்க வேண்டும். இந்த ஆணைகளுக்காக தமிழக அரசு எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை மிக மிக அவசரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 13 பேர் உயிரிழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. எனவே இந்த நெருக்கடியான நேரத்தில் தாங்கள் தலையிட்டு தமிழகத்திற்கு உடனடியாக முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல குறைந்தபட்சம் 20 ஐஎஸ்ஓ கிரையோஜெனிக் கண்டெய்னர்களை ரயில்கள் மூலம் அனுப்ப வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நாட்டை காக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எனது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவேன் என்று உறுதி செய்கிறேன்.

Related Stories:

>