புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றார்: கவர்னர் தமிழிசை பதவி பிரமாணம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் முதல்வராக 4வது முறையாக  ரங்கசாமி நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் தமிழிசை தமிழிலேயே பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்கள், பா.ஜ 6 இடங்கள் என பெரும்பான்மைக்கு தேவையான 16 இடங்களில் வெற்றி பெற்றது.  இதையடுத்து, கடந்த 3ம் தேதி என்.ஆர்.காங். சார்பில் சட்டமன்ற கட்சி தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், பாஜ எம்எல்ஏக்களும் ரங்கசாமிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, கவர்னர் மாளிகை வளாகத்தில் நேற்று மதியம் முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழிலேயே பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் ரங்கசாமிக்கு கவர்னர் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு ரங்கசாமியும் பூச்செண்டு கொடுத்தும், சால்வை அணிவித்தும் கவுரவித்தார். 20 நிமிடங்களில் விழா நிறைவு பெற்றது. முதல்வர் ரங்கசாமியுடன் அமைச்சர்கள் யாரும் நேற்று பதவி ஏற்கவில்லை.

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜ தேசிய செயலாளர் சி.டி.ரவி, தமிழக பாஜ தலைவர் முருகன், திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ, அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், காங். எம்எல்ஏ வைத்தியநாதன், சுயேட்சை எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு ரங்கசாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நமச்சிவாயம் தேர்வு: பாஜ தலைமை அலுவலகத்தில் கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பாஜ சட்டமன்ற தலைவராக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பாஜவுக்கு துணை முதல்வர், 2 அமைச்சர் பதவி:மத்திய மந்திரி பேட்டி

மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பேட்டி: என்.ஆர் காங்கிரசுக்கு 3 அமைச்சர்கள், பாஜவுக்கு ஒரு துணை முதல்வர், 2 அமைச்சர்கள் பதவி ஏற்பதற்காக, பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்துள்ளோம். ஓரிரு நாள்களில் அமைச்சரவை பொறுப்பேற்கும். மாநில மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும். தென்மாநிலங்களில் முதலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. தொடர்ந்து, 2வதாக புதுவையிலும் ஆட்சி அமைத்திருப்பது பாஜகவுக்கு பெரும் மகிழ்ச்சியாகும். தமிழகத்திலும் தாமரை காலூன்றியுள்ளது. விரைவில் தெலுங்கானாவிலும் பாஜ வளரும். மாநில அந்தஸ்து உள்ளிட்ட மாநிலத்துக்கு தேவையானதை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆலோசித்து செயல்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: