‘மய்யத்தில்’ வீசுது அதிருப்தி புயல்: கமல் கட்சியில் 4 மாவட்ட செயலாளர்கள் ராஜினாமா: திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு

திண்டுக்கல்: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 4 மாவட்ட செயலாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர். திண்டுக்கல்லில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜாபர், நேற்று அளித்த பேட்டி: மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.  அவருடைய நிலைப்பாட்டை ஆதரித்து திண்டுக்கல் மாவட்ட மேற்கு மாவட்ட செயலாளர் ஜாபர், தென் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓம் குமார், தென்மேற்கு மாவட்ட செயலாளர் சிவசக்திவேல்,  வட மத்திய மாவட்ட செயலாளர் கருப்புசாமி ஆகியோர் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளோம். எங்களது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பியுள்ளோம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை. துணைத்தலைவர் மகேந்திரன் கருத்து ஏற்புடையதாக இருக்கிறது. அவருடைய ராஜினாமா கடிதத்திற்கு கமல் கொடுத்த விளக்கத்தை  ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த 3 ஆண்டு காலம் தன்னுடைய பொருளாதாரத்தை இழந்து, கட்சிக்கு உழைத்த மகேந்திரனை துரோகி என்று கமல் கூறியது வேதனையளிக்கிறது. தேர்தலுக்கு பின்பும் கூட கட்சி தவறான திசையில் போய் கொண்டு இருக்கிறது. வியூகம் வகுப்பாளர்கள் என்று சொல்லிக் கொண்டு சங்கையா சொல்யூசன் நிறுவனம், கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கமலின் குடும்ப நண்பர் கமீலா நாசர் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருக்கு எதிராக சூழ்ச்சி செய்து அவரை ஒதுக்கினார்கள். குமரவேலையும் ஒதுக்கினார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பின்னைடைவுக்கும், தோல்விக்கும் அந்த நிறுவனம்தான் காரணம். இந்த கம்பெனி நடத்துபவர்கள் சுரேஷ் ஐயர், மகேந்திரன் ஆகியோரது அணுகுமுறை சரியில்லை. கமலுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே மிக பெரிய இடைவெளி உள்ளது. மிகப்பெரிய சர்வாதிகார போக்கில் கட்சி செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட செயலாளர்கள் ஓம் குமார், சிவசக்திவேல், கருப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: