போடி அருகே அனுமதி முடிந்ததால் சீல் வைக்கப்பட்ட குவாரியில் மணல் அள்ளிய 15 லாரிகள்: கிராம மக்கள் சிறைபிடித்தனர்

போடி: தேனி மாவட்டம், போடி அருகே மணியம்பட்டி பகுதியில் மணல் குவாரி, அனுமதி முடிந்ததையடுத்து சீல் வைக்கப்பட்டதால், கடந்த 3 மாதங்களாக மணல் அள்ளவில்லை. மேலும் மணல் கடத்தலை தடுக்க மணியம்பட்டி சாலையில் கருவேல மரங்களை கிராம மக்கள் வெட்டி போட்டு வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு 15க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் சின்னப்பொட்டிபுரம் வழியாக மணல் குவாரிக்கு சென்றன. அங்கு சீலை உடைத்து நுழைந்து, இரவு முழுவதும் மணலை அள்ளி 15 லாரிகளில் நிரப்பியுள்ளனர். பின்னர் நேற்று மணியம்பட்டி சாலையில் கிடந்த கருவேல மரங்களை அகற்றி செல்ல முயன்றனர். இதை கவனித்த கிராம மக்கள் திரண்டு வந்து மணல் லாரிகளை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போடி புறநகர் போலீசாரிடம்,  லாரிகளை ஒப்படைத்தனர். இது குறித்து மாவட்ட கனிமவளத்துறைக்கு போலீசார் தகவல் தெரிவித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>