பதவியேற்ற உடன் அறிவிப்பு 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து

1.ரேஷன் கார்டுகளுக்கு 4 ஆயிரம் கொரோனா நிவாரணம்

2.பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்

3.ஆவின் பால் லிட்டருக்கு3 ரூபாய் குறைப்பு

4.தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்கும்

5.உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்துக்கு புதிய துறை

சென்னை: முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகம் வந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 முக்கிய கோப்புகளில் முதல் கையெழுத்து போட்டார். அதன்படி, கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம், நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று காலை 9.10 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து நேராக, அண்ணா, கலைஞர் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு சரியாக மதியம் 12.20 மணிக்கு சென்னை, தலைமை செயலகம் வந்தார். அவர் தலைமை செயலகம் வந்ததையொட்டி சாலையின் இரண்டு பக்கங்களும் திமுக தொண்டர்கள் திரளாக கூடி இருந்து ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தலைமை செயலகத்தில் பிரதான வாயிலும், முதல்வர் அலுவலகம் செல்லும் அலுவலக நுழைவாயிலிலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி தலைமை செயலகம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக டிஜிபி திரிபாதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து தலைமை செயலகத்தின் ஒன்றாம் எண் நுழைவாயில் அருகே போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. போலீஸ் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொணடார்.

பின்னர் தலைமை செயலகத்தின் முதல் மாடியில் உள்ள முதல்வரின் அலுவலகத்துக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அவருக்கு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மீண்டும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் முதல்வராக பதவியேற்று தலைமை செயலகம் வந்து பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். சரியாக மதியம் 12.22 மணிக்கு முதல்வர் நாற்காலியில் மு.க.ஸ்டாலின் அமர்ந்து, தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதைதொடர்ந்து 12.25 மணிக்கு, தமிழக மக்களுக்கு தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 5 முக்கிய கோப்புகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதன் விவரம் வருமாறு:

1. கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின்

துன்பங்களை போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் ரூ.4,000 வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,153.39 கோடி செலவில் ரூ.2,000 வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கப்படும்.

2. மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வீதம் வருகிற 16ம் தேதி முதல் குறைத்து விற்பனை செய்யப்படும்.

3. தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் நாளை (இன்று) முதல் பயணம் செய்யலாம். இதன்மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவு தொகையான ரூ.1,200 கோடியை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.

4. தேர்தல் பிரசாரத்தின்போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பான மனுக்களை பெற்று, அந்த மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு ஐஏஎஸ் அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

5. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலை குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கப்படும். இதன்படி முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்புக்கு தமிழக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கொரோனா நிவாரண நிதி இந்த மாதமே ரூ.2 ஆயிரம் மற்றும் மாநகர அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ₹3 குறைப்பு திட்டத்தை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

Related Stories:

>